Abstract:
அறிவுத்துறைகளில் உண்மைகளை கண்டறிந்து கொள்வதற்கான தர்க்கரீதியான அணுகுமுறை விஞ்ஞானமுறை என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. பிரான்சிஸ் பேக்கன் தொடக்கி வைத்த விஞ்ஞான முறை இரண்டு மரபுகளாக வளர்ச்சி அடைகின்றது. விஞ்ஞான ஆய்வுக்கு அடிப்படைக் கொள்கை ஒன்று தேவை என்பது ஒரு பிரிவு. விஞ்ஞான ஆய்வுக்கு அடிப்படைத் தத்துவம் தேவையில்லை என்பது இரண்டாவது பிரிவு. இந்த இரண்டாவது பிரிவில் பெயராபென்ட் லக்காதோஸ் போன்றவர்கள் முதன்மைக்குரிய சிந்தனையாளர்களாவர். பெயராபென்ட்டினுடைய ஆய்வு முறையினை 'அராயக கருத்து சிந்தனை முறை' என்பர். விஞ்ஞானமுறை தொடர்பாக நிச்சயப்படுத்தப்பட்ட அணுகுமுறை என ஒன்றில்லை. 'எதுவும் நிகழலாம்' என்பதே இவரது கருத்தின் சாராம்சமாகும். இவரது சிந்தனைகளின் தாக்கம் லக்காதோஸின் சிந்தனைகளிலும் காணப்பட்டிருந்தது. 'விஞ்ஞான ஆய்வு நிகழ்ச்சித் திட்டத்துக்கான முறையியல்' என்பதே இவர் முன்மொழிந்த முறையியலாகும். இவ்விரு சிந்தனையாளர்களும் ஒவ்வொரு விஞ்ஞான ஆய்வுகளும் தனித்துவமானவை என்பதனையும், பொதுமுறையியல் என்பது சாத்தியமற்றது என்பதனையும், ஆய்வாளனுக்கு எந்தவொரு முறையியற் கட்டுப்பாடுகளும் இன்றி ஆய்வுக்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினர். எனினும் அதனை விளக்கும் போக்கில் இருவருக்கும் இடையில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகளை வெளிக்கொணர்வதோடு பொதுமுறையியலின் நிராகரிப்பு விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தினை விமர்சன ரீதியில் பகுப்பாய்வு செய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. பொதுமுறையியலின் நிராகரிப்பானது ஆய்வாளனின் சுதத்திரத்தைப் பாதுகாத்து, ஆய்வின் தனித்துவத்தைப் பேணிக்கொள்ள வழிவகுத்துள்ளமையையும், அதன் விளைவாக விஞ்ஞான ஆய்வுகள் பல பரிமாணங்களில் வளர்ச்சியடைந்துள்ளமையையும் வெளிக்கொணரும் ஓர் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரையானது விபரண முறையியல், விமர்சனப் பகுப்பாய்வு முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்குரிய தரவுகள் பெயராபென்ட்டினதும் லக்காதோஸினதும் பிரதான நூல்களில் இருந்தும், அவர்களது முறையியல்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், மற்றும் பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.