Abstract:
பொப்பரது பொய்ப்பித்தல் கோட்பாட்டிற்கும், தோமஸ்கூனினுடைய கட்டளைப்படிம மாற்றத்திற்கும் இடையிலுள்ள வெளிப்படையான ஒற்றுமைத் தன்மைகளையும், உள்ளார்ந்த ரீதியில் அவை கொண்டுள்ள வேறுபாடுகளையும் ஒப்பிட்டு விளக்குவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கின்ற விஞ்ஞான செயன்முறைக்குரிய வரன்முறைகளை வழங்குவதாக விஞ்ஞான முறையியல் அமைகின்றது. விஞ்ஞான முறையியல் தொடர்பாக காலத்துக்குக் காலம் பல முறையியலாளர்களால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றுள் சமகாலத்தில் காள் பொப்பரினது பொய்ப்பித்தல் கோட்பாடும், தோமஸ்கூனினுடைய கட்டளைப்படிம மாற்றமும் முறையியல் வரலாற்றில் புரட்சிகரமானவைகளாக அமைந்தன. காள் பொப்பர் பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானத்தின் இலட்சணம் எனக் கருதினார். சாதாரணமாக ஒவ்வொரு விஞ்ஞானியும் தான் சார்ந்துள்ள கொள்கைகளை நிறுவுதற்கே முயற்சி செய்வது இயல்பானது. ஆனால் பொய்ப்பித்தல் கோட்பாடு விஞ்ஞானி எப்பொழுதும் பொய்ப்பிப்பதற்கே முயல வேண்டும் என வலியுறுத்துகின்றது. ஒரு கொள்கை பொய்ப்பிக்கப்படும் பொழுதுதான் அந்த இடத்தில் புதிய கொள்கை சாத்தியமாகின்றது. எனவே விஞ்ஞான அறிவின் வளர்ச்சிக்கு பொய்ப்பித்தல் மிக அவசியம் என பொப்பர் வலியுறுத்தினார். அதே சமயம், தோமஸ்கூனினுடைய கருத்துப்படி விஞ்ஞான வளர்ச்சியானது கட்டளைப்படிம மாற்றங்களின் ஊடாகவே இடம்பெற்று வந்திருக்கின்றது. இக் கட்டளைப்படிம மாற்றமானது சாதாரண காலம், புரட்சிக் காலம் என இருவேறுபட்ட காலங்களுக்கூடாக இடம் பெறுகின்றது. புரட்சியின் மூலம் சாதாரண காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த கட்டளைப்படிமம் நிராகரிக்கப்பட்டு புதிய கட்டளைப்படிமம் முன்மொழியப்படுகின்றது. இந்த செயன்முறையே விஞ்ஞான வளர்ச்சிக்கு அவசியமானது என தோமஸ்கூன் கருதியதோடு அதனை பல்வேறு படிமுறைகளுக்கு ஊடாக விளக்கினார். வெளிப்படையாக நோக்குகின்ற பொழுது இருவரும் பழைய கொள்கையின் வீழ்ச்சியும், புதிய கொள்கையின் உருவாக்கமுமே விஞ்ஞான வளர்ச்சியை சாத்தியமாக்குகின்றது என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர் எனலாம். ஆனால் இவர்களது கொள்கைகளின் உள்ளார்ந்த தார்ப்பரியம் வேறுபட்டவை. பொப்பர் பொய்ப்பித்தலையே நோக்கமாகக் கொண்டிருந்தார். மாறாக தோமஸ்கூன் அசாதாரண தோற்றப்பாடுகளாலும் அதன் விளைவால் ஏற்படும் நெருக்கடிகளாலும் ஒரு கொள்கை கைவிடப்படுவதனை ஏற்றுக் கொள்கின்றார். இந்த வகையில் இவ்விரு முறையியல்களும் தமக்கிடையே ஒற்றுமைப் பண்புகளையும், வேற்றுமைப் பண்புகளை கொண்டிருப்பதனை இவ் ஆய்வு வெளிக்கொணர்கின்றது. இவ் ஆய்வுக் கட்டுரையானது விபரண முறையியல், பகுப்பாய்வு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்குரிய தரவுகள் தோமஸ்கூனினதும், காள் பொப்பரினதும் பிரதான நூல்களில் இருந்தும், அவர்களது முறையியல்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், மற்றும் பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.