dc.description.abstract |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையின் இந்து சமூகப்புலத்தில் நிகழ்ந்த சமய மறுமலர்ச்சியினைச் சைவசமய மறுமலர்ச்சி என்று கொள்வதே பொருத்தமானது. ஆறுமுகநாவலரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இம்மறுமலர்ச்சிச் செல்நெறியில் அச்சூடகத்தின் வகிபங்கு காத்திரமானதாகும். அச்சூடகத்தின் வருகையுடன் சமயச்சார்புடைய பத்திரிகைகளும் வெளிவரத் தொடங்கின. இவை கிறிஸ்தவ மற்றும் இந்துசமயச் சார்புடையவையாகத் தத்தமது பரப்புரைகளை வெளியிடுவதில் தீவிரமாகச் செயற்பட்டன. இலங்கைநேசன், சைவஉதயபானு, விஞ்ஞானவர்த்தினி, சைவஅபிமானி, இந்துசாதனம் போன்றவை இந்துசமயச் சார்புடைய பத்திரிகைகளாகத் திகழ்ந்தன. இவை உதயதாரகை, வித்தியாதர்ப்பணம், இலங்காபிமானி போன்ற கிறிஸ்தவச் சார்புடைய பத்திரிகைகளின் சமயப்பிரசாரத்துக்கு எதிராகச் செயற்பட்டன. ஆறுமுகநாவலர் வகுத்துக்காட்டிய சுயமதஸ்தாபனம், பரமதகண்டனம், என்ற இரண்டு அடிப்படைத் தளங்களில் இச்செயற்பாடுகள் அமைந்தன. இப்பத்திரிகைகள்; இந்துசமயக்கல்வி, இந்துப்பெண்களின் சமூக மேம்பாடு, திருக்கோயிற் பரிபாலனம், மதமாற்றத்திற்கு எதிரான கண்டனங்கள் போன்ற முக்கிய கருத்தியல்களைத் தமது பிரசுரங்களால் வலியுறுத்தின. இவை தமது வெளியீடுகளினூடாக இந்து சமய மறுமலர்ச்சிச் செல்நெறியில் உத்வேக பங்காளர்களாகச் செயற்பட்ட படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துசமயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெருவெற்றி ஈட்டின. இதன் மூலமாகவே இலங்கையில் இந்துசமய மறுமலர்ச்சி விரைவில் சாத்தியப்பட்டது எனலாம். |
en_US |