Abstract:
தென்னாட்டு வைணவநெறியின் முக்கிய பரிமாணமாகத் திகழ்வது ஸ்ரீ இராமானுஜரின் விசிட்டாத்வைத வேதாந்தக் கொள்கையாகும். இத்தத்துவக் கொள்கையானது அக்காலத்தில் சமய – தத்துவத் தளங்களில் மட்டுமன்றி சமூக அரசியல் தளங்களிலும் பாரிய சலனங்களை ஏற்படுத்தியது. இராமானுஜரின் பின்வந்த வைணவ ஆசாரிய மரபினர் உள்ளிட்ட அனைத்து வைணவ சமுதாயத்தினர் மத்தியிலும், இராமானுஜரின் விசிட்டாத்வைதக் கருத்தியல்கள் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. கம்பனும் இதற்கு விதிவிலக்கன்று. கம்பன் தானியற்றிய இராமகாதையின் (கம்பராமாயணம்) அனேக இடங்களில் நேர்த்தியாகவும், ஆழமாகவும் அதேவேளை கதையோட்டம் குன்றாமல் சமயோசிதமாகவும் விசிட்டாத்வைதக் கருத்தியல்களை இழையோடவிட்டுள்ளார். பிறப்பால் வைணவராகிய கம்பர், வடமொழியில் வான்மீகி தந்த வி~;ணுவின் இராம அவதாரத்தின் மகிமையைத் தமிழில் இராமகாதையாகப் பாடினார். தனது தனிநபர் வாழ்வில் சோழ மன்னனால் ஏற்பட்ட நெருக்கடிகள் இராமானுஜருக்கும் ஏற்பட்டமை, தனது காவியத்தலைவனான இராமபிரானைப் போன்று இராமானுஜரும் குலம், ஆசாரம், வர்ணபேதங்களைப் புறத்தொதுக்கி மனுக்குல நன்மைக்காகச் செயற்பட்டமை போன்ற காரணங்களால் இயல்பாகவே இராமானுஜர் மீதும், அவருடைய விசிட்டாத்வைதக் கோட்பாட்டின் மீதும் கம்பனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். அந்தவகையில் விசிட்டாத்வைதம் சாதிக்கும், தத்துவத்திரயக் கொள்கை, ஈஸ்வரன், சித்து, அசித்து ஆகியவற்றுக்கிடையிலான உறவுநிலை, இவற்றின் பண்பமைதிகள், விசிட்டாத்வைதம் பேசுகின்ற பேதாபேதவாதம், அங்க அங்கி சம்பந்தம், பரிணாமவாதம், விடுதலை ஆகிய கருத்தியல்கள் தொடர்பில் கம்பன் தனது இராமகாதையில் ஆங்காங்கே விளம்பிநிற்பது துலாம்பரமாகத் தெளிவாகிறது.