Abstract:
இந்து நாகரிக வரலாற்றில் கணிதவியல், வானியல், ஆகிய இரண்டு அறிவியற் புலங்கள் தொடர்பில் ஆரியப்பட்டரே ஆதர்சபுருஷராகக் கருதப்படுகிறார். வுட இந்தியாவில் அறிவியற் சிந்தாந்த காலகட்டம் எனச் சுட்டப்படுகின்ற கி.பி.500-1200 காலப்பகுதியின் முற்கூறுகளில் வாழ்ந்த இவர் (கி.பி.476) புராதன இந்து வானியற் புலமை மரபின் மடைமாற்றப் புள்ளியாக கருதப்படுகிறார். இந்து சமுதாயத்தில் அறிவியற் கருத்தமைவுகள் பௌராணிகம் தோய்ந்த நிலையிலிருந்து பகுத்தறிவு சார்ந்த தூய விசாரணை பண்புடையனவாகப் பரிமாணம் பெறத்தொடங்கியமைக்கான மூலாதாரமாக இவரது ஆரியப்பட்டீயம் என்ற பனுவல் அமைந்துள்ளது. எண்கணிதம், அட்சரகணிதம், கேத்திர கணிதம், திரிகோண கணிதம் ஆகிய கணிதவியற் புலங்களில் ஆரியப்பட்டீயம் முக்கிய எல்லைகளைத் தொட்டுச் சென்றுள்ளது. பதின்ம எண்கள், மூவுறுப்பு விதி, முதல்நிலை முடிவுபெறாச் சமன்பாடுகள், கேத்திர கணித உருக்களுடன் தொடர்புடைய கணிதப் பிரச்சனைகள் என்பவை இவ்வகையில் குறிப்பிடப்பாலன. 'ஆசன்ன' என்ற கலைச்சொல்லால் 'π' இன் பெறுமதியைத் துணியும் முறைமையும் ஆரியப்பட்டீயத்தில் அறிமுகமாகியுள்ளது. 'டயோபன்ரைன்' சமன்பாடுகள் என கிரேக்க வழியில் அறியப்பட்ட தீர்வுதா சமன்பாடுகளைத் தீர்க்கும் முறையானது 'குடக முறை' என ஆரியப்பட்டரால் அன்றே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. திரிகோணகணிதத்தின் பிரதான அம்சமான 'சைன்' அட்டவணைக்கு முன்னோடியான அட்டவணைகளும் அறிவுலகத்திற்கு ஆரியப்பட்டரின் மூலமாகவே கிடைத்தன. காலக்கணிப்பிலும் ஆரியப்பட்டர் புதுமையான வழிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தார். குறிப்பாக யுகங்களின் கணிப்பீடுகள் தொடர்பில் இவர் புகுத்திய நடைமுறைகள் குறிப்பிடற்பாலன. வானியல் தொடர்பில் இவருடைய சிந்தனைகள் அக்காலத்தில் எவரும் தொட்டிராத எல்லைகளைத் தொட்டிருந்தன. புவிச்சுழற்சி, கிரகணங்கள், கோள்களின் அசைவியக்கம் தொடர்பில் இவர் தனது பனுவலான ஆரியப்பட்டீயத்தில் முன்வைத்திருந்த கருத்தியல்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சுட்ட இயலும். இவருடைய அறிவியற் சிந்தனைகளை பாரசீகர்களும், அரேபியர்களும், உள்வாங்கித் தமது அறிவியற் கோட்பாடுகளை செழுமைப்படுத்தியிருந்தனர். துரதிஷ்டவசமாக மேற்குலகம் ஆரியப்பட்டரின் சிந்தனைகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. இதனால் கணிதவியல் மற்றும் வானியல் ஆகிய அறிவியற் புலங்களில் ஆரியப்பட்டருக்கு மட்டுமே கிடைத்திருக்க வேண்டிய சில அங்கீகாரங்களில் பிறரும் பங்குதாரர்கள் ஆகிவிட்டனர்