Abstract:
மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக வீடு அமைகின்றது. உலகின் பெரும்பாலான சமூகங்கள் அனுபவிக்கும் சிக்கலான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் பல கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் 22 வீதமான மக்கள் வீடமைப்பு வசதிகள் இன்மையால் இன்னல்களை அனுபவித்து வருவதாக கூறிய அமைச்சர் சயித் பிரேமதாஸ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நாடளாவிய ரீதியில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதி வரை காணியற்றவர்களுக்கு இலவசமாக காணிகள் வழங்கியதுடன், வீடற்றவர்களுக்கு நிரந்தர வதிவிட வசதிகளை ஏற்படுத்தும் கொள்கையின் நிமித்தம் "மாதிரி கிராமம்” என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதி உதவியுடன் வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தினார். இத்திட்டமானது "நாட்டில் ஒரு குடிசை வீடுகளும் இருக்கக்கூடாது” எனும் தொனிப் பொருளுடன் மக்களின் செழிப்பான எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தலின் போது சயித் தோல்வியுற்றதனால் இக்கொள்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்வில் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக மாற்றங்களினையும் இது ஏற்படுத்தியுள்ளது. யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச பிரிவுட்குட்பட்ட மணியந்தோட்ட கிராமத்தினை ஆய்வு புலமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.