Abstract:
பணிப்பெண் வேலைவாய்ப்பு என்பது ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் உலக நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் முறையாகும். ILO வின் அறிக்கையின் பிரகாரம் உலகமெங்கிலுமுள்ள 75 மில்லியன் வீட்டுப் பணியாளர்களில் 72 வீதமானோர் பெண்களாகக் காணப்படுகின்றனர். மத்தியகிழக்கு நாடுகளில் பணிப்பெண்களின் ஊழியத்திற்கான கேள்வி அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியான பிரச்சினை, வாழ்வாதார செலவின் அதிகரிப்பு மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைத்தரம் என்பவற்றின் காரணமாக இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்குப் பணியாட்களாகச் செல்கின்றனர். மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகத் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் என்பது பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான ஒரு வழியாகக் காணப்படுகின்றதெனினும் இங்கு பெண்கள் பல்வேறு சமூகப் பண்பாட்டுப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இவை அவர்களின் தனி மனித மற்றும் சமூக வாழ்வில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் இந்த ஆய்வானது இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்று திரும்பிய பெண்களின் சமூக அனுபவங்களைப் பகுப்பாய்விற்கு உட்படுத்துகின்றது. பணிப்பெண்களாகச் சென்ற பெண்கள் தாம் பணிசெய்யும் இடங்களில் எதிர்கொண்ட சமூக-உளப்பிரச்சினைகளையும் அவர்கள் மீளவும் தத்தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்னர் எதிர்கொள்கின்ற சமூக-உளப்பிரச்சினைகளையும் இனங்காண்பது ஆய்வின் பிரதான நோக்கமாகும். பண்புசார் ஆய்வு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வானது நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாகசேனை கிராம சேவையாளர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கான முதல்நிலைத் தரவுகள் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பின் வழியாக தெரிவுசெய்யப்பட்ட மத்திய கிழக்குநாடுகளில் பணியாற்றிய பணிப்பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. தகவலாளிகளின் சமூக அனுபவங்கள் அவர்களுடைய விடய வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டு கருப்பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்வதற்குத் தூண்டிய பிரதான காரணியாகக் குடும்ப வறுமை (60%) காணப்படுகின்றது. மத்தியகிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாகச் சென்ற பெண்களின் சமூக அனுபவங்கள் தனித்துவமானது. பணிபுரிந்த காலத்தில் பெண்கள் உடல்ரீதியான (40%), பாலியல் ரீதியான (26%) துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தமை அவர்களின் விடய வரலாறுகளில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறவுகளை நீண்ட நாட்கள் பிரிந்திருத்தல் சார்ந்தும் அவர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் சார்ந்தும், பல்வேறுபட்ட உளநெருக்கீடுகளை பெண்கள் எதிர்கொண்டுள்ளனர்.