Abstract:
நீர் மனித அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது. உலகளாவிய நிலையில் நீர்ப்பரம்பல் செறிவாகக் காணப்பட்டாலும் குடிநீர்ப் பரம்பல் மிகவும் மட்டுப்பாடாகவுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைந்தவகையில் காணப்படுகின்ற தீவுகளில் மக்களின் வாழ்வு என்பது பாரம்பரியமானது. யாழ்குடா நாட்டிற்கு மேற்கே பாக்குநீரிணைப் பகுதியில் அமைந்து காணப்படுகின்ற நெடுந்தீவில் குடிநீர்ப் பற்றாக்குறை என்பது பொதுவான பிரச்சினையாகப் பல தாசாப்தங்களாகக் காணப்படுகின்றது. இங்குள்ள மக்களிடையே நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்தலுடன் தொடர்புடைய நடத்தைகளையும் சமூக விவகாரங்களையும் இனங்காணுதல் இந்த ஆய்வின் நோக்கமாகும். பண்புசார் ஆய்வு அணுகுமுறையினை முதன்மையானதாகக் கொண்ட கலப்பு ஆய்வு முறையிலில் அமைந்த ஆய்விற்கான முதன்நிலைத் தரவுகள் நெடுந்தீவு மத்தி-கிழக்கு J/05 மாதா கிராமத்தில் விடய ஆய்வு, நேர்காணல் போன்ற பண்புசார் கருவிகளின் துணையுடனும் சேகரிக்கப்பட்டன. ஆய்வுப் பிரதேசத்தில் நீர் கிடைப்பனவு வழிமுறைகளையும் அதுசார்ந்த வளப்பரம்பல்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு வீட்டு அலகு மதிப்பீடும் பயன்படுத்தப்பட்டது. குடிநீர், சமையல், ஏனைய அன்றாடத்தேவைகள் போன்றவற்றிற்கு மக்கள் கிராமத்தின் பொதுக் கிணறுகள், குழாய்நீர் விநியோகம், பொது நீர்த்தாங்கிகள் போன்றவற்றினைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 93 வீத மக்களிடம் வீட்டில் சொந்தக் கிணறுகள் காணப்பட்டாலும் அவை குடிநீர் தவிர்ந்த ஏனைய அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. அவையும் வெப்பமான மாதங்களில் வற்றிவிடுகின்றன. குழாய் மூலமான நீர் வசதி 61 வீதமான குடும்பங்களுக்கு கிடைக்கப்பெற்றாலும் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழாயில் முதலில் வருகின்ற நீர் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுடன் குடும்பத்தில் ஒருவரேனும் குறிப்பிட்ட நேரத்தில் நீர்வருகின்ற நேரம் நீரைப் பெறுதல் வேண்டும் என்பது மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அத்துடன் 39 வீதமான மக்கள் தங்களுடைய குடிநீர் தேவையினைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு பொது நீர்த்தாங்கி, பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர்.