Abstract:
தொல்குடிகள் பற்றிய அண்மைக்கால சமூக-மானிடவியல் ஆய்வின் தொடர்ச்சியாக இவ்வாய்வானது இலங்கையின் தொல்குடியான வேடர்களின் வாழ்வாதாரக் கட்டமைப்பும் அவற்றில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்கின்றது. மக்களின் வாழ்வாதார நடவடிக்கை என்பது குறிப்பிட்ட சுற்றுச் சூழமைவிற்கு ஏற்ப மக்கள் ஏற்படுத்திக்கொண்ட பண்பாட்டு தகவமைப்பு முறைமையாகும். எனினும் அண்மைக்கால சமூக அசைவியக்கத்தின் வழியாக மக்களின் பண்பாட்டு பாரம்பரியத்துடன் கூடிய வாழ்வாதார நடவடிக்கைகள் மாற்றமடைந்து வருகின்றன. இந்தவகையில் இவ்வாய்வின் பிரதான நோக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட முறுத்தானை வேடுவர்களின் வாழ்வாதார கட்டமைப்பும் அவற்றில் நிகழ்ந்து வருகின்ற மாற்றங்களையும் அதற்கான காரணங்களையும் பகுப்பாய்வு செய்வதாக காணப்படுகின்றது. இது பண்புசார் முறையில் அமைந்த விபரண ஆய்வாகும். விடய ஆய்வு, பிரதான தகவல் தருநருடனான நேர்காணல், பங்குபற்றல் அவதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வின் முதல்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவுகள் பிரதேச செயலக அறிக்கைகள் மற்றும் இலங்கையில் வேடர்கள் பற்றி ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முறுத்தானை பிரதேசத்தில் வாழும் வேடுவர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களிடையே மேற்கொள்ளப்பட்ட களாய்வின் வழியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கருப்பொருள் பகுப்பாய்வின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்துள்ளது. முறுத்தானை பிரதேசத்தில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 902 வேடுவ மரபிலான மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் பாரம்பரியமான வாழ்வாதார நடவடிக்கையாக வேட்டையாடுதல் சேனைப்பயிர்ச்செய்கை. மீன்பிடித்தல், விறகு வெட்டுதல் வீட்டுத்தோட்டம் போன்றனவும் உணவு சேகரிக்கும் முறைகளாக தேன் எடுத்தல், கிழங்குசேகரித்தல் போன்றனவும் காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பாரம்பரியமான வாழ்வாதார நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சுற்றுச் சூழலியல், சமூக-பொருளதார. இலவசக் கல்வி மற்றும் அரசியல் செயற்பாட்டு திட்டங்களின் வழியாக பல்வேறுபட்ட மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளன. குறிப்பாக விவசாய செயற்பாட்டில் ஈடுபடல், விவசாயம் சார்ந்த கூலிகளாக ஈடுபடல், விவசாயம் சாராத கூலிகளாக ஈடுபடல், தனியார் துறைகளில் வேலை செய்தல் போன்றவை காணப்படுகின்றன. 2009 ஆண்டு வரையாக நாட்டில் இடம்பெற்றுவந்த உள்நாட்டு யுத்தம் வேடர்களின் பாரம்பரிய பொருளாதார நடைவடிக்கையான காடுகளில் தேன் எடுத்தல். சேனைப் பயர்ச்செய்கை செய்தல் போன்றவற்றில் பல்வேறு தடைகளை உருவாக்கியுள்ளது. இதனால் இளைஞர்கள் தொழில் வாய்ப்பினைத் தேடி நகரம் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லத் தூண்டப்பட்டதும் குடும்ப மற்றும் சமூக அந்தஸ்துநிலை மாற்றங்களும் முறுத்தானை வேடர்களின் பாரம்பரியமான வாழ்வாதர நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்மையினை இவ்வாய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.