dc.description.abstract |
இந்துநாகரிகத்தின் அடிப்படையான அம்சங்களில் அரசியல் என்பதும் ஒன்றாகும். இந்துநாகரிகத்தை வளம்படுத்திச் செல்வதில் அரசியலானது புராதன காலத்திலிருந்தே செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குரிய பண்பியல்புகளை நேர்த்தியோடு எடுத்துரைத்த பாங்கு இந்து அரசியற் பனுவல்களுக்கு உண்டு. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்டான். அரச இறைமையைத் தனிஒருவனால் மட்டும் நிறைவேற்ற முடியாது. அதனால் தான் தனியொரு சக்கரம் உருள்வதில்லை என்பதற்கேற்ப பல அங்கங்களைக் கொண்டதாகவே புராதன இந்து அரசியல் முறைமை காணப்பட்டது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் சப்த அங்கங்களை அரசியலுக்கு வகுத்துள்ளது. இதேபோல ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக் குழுக்களையும் அரசனுடைய அங்கங்களாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் பகர்ந்துள்ளன. ஒரு நாட்டின் அரசை சிறந்த முறையில் பரிபாலனம் செய்வதற்கு ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் இன்றியமையாதவையாகும். இதனை இளங்கோ அடிகளால் ஆக்கப்பெற்ற தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் ஐம்பெருங்குழு, எண்பேராயம் பற்றி எடுத் துரைத்துள்ளது. இக்காப்பியம் புகார், மதுரை. வஞ்சி எனக் காண்டங்களை அமைத்து மூவேந்தர்களையும் மூன்று நாடுகளையும் அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கே இணைக்கிறது. முடியுடை வேந்தர்களின் ஆட்சிச் சிறப்பை எடுத்துரைக்கும் விதத்தில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் திறம்பட செயற்பட்ட தன்மையினைப் பதிவு செய்திருந்தமையை அவதானித்து அவற்றை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரை விபரண ஆய்வு முறையியலுக்கு அமையக் கட்டமைக்கப்படுகிறது. பொருத்தமான சந்தர்ப்பங்களில் தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியலுக்கும் உட்படுத்தப்படும். |
en_US |