dc.description.abstract |
சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர் ஒட்;டக்கூத்தரின் இலக்கியங்கள் பற்றிய நுண்ணாய்வுகள் எதுவும் நாம் அறிந்தவரையில் இதுவரை செய்யப்படவில்லை. அவ்வப்போது உதிரியான சில கட்டுரைகள் வெளிவந்துள்ளனவெனினும் அவை ஒட்டக்கூத்தரின் இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்தவையாகக் காணப்படவில்லை. எனவே தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தர் பெறும் இடத்தினை அவரது இலக்கியங்களின் வழி ஆராய்வது அவசியமாகியது. சோழப் பேரரசின் வீழ்ச்சியோடு அரசவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர் பற்றிய பல கட்டுக்கதைகளும் புனைந்துரைகளும் இடம்பெறத் தொடங்கின. அக்கால அரசியல், சமூக, பண்பாட்டு காரணிகளினால் ஒட்டக்கூத்தர் பற்றிய உண்மையான வரலாறு வெளிவராமற் போயிருக்கலாம். ஓட்டக்கூத்தரின் காலம் பற்றியும் ஆய்வறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை பற்றிய தெளிவான விளக்கத்தினையும் அவரது ஊர், குலம், நூல்கள் பற்றிய விபரங்களையும் முதலாவது இயலிலே விரிவாக ஆய்வு செய்துள்ளேன். ஓட்டக்கூத்தரின் ஆக்கங்களை அறிமுகம் செய்து, அவற்றிற் சிறப்பாக மூவருலா, தக்கயாகப் பரணி, குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் முதலியன விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஓட்டக்கூத்தர் எழுதியவை எனக் கூறப்படும் நூல்களிலே மறைந்தவை பற்றிய தரவுகளும் சந்தேகத்திற்கிடமான நூல்கள் பற்றிய விபரங்களும் இவ்வாய்விலே இடம் பெற்றுள்ளன. தமிழிலே அரசவை இலக்கிய மரபின் தோற்றம் வளர்ச்சி பற்றிய அறிமுகமும் அந்த மரபிலே ஒட்டக்கூத்தர் பெறும் இடமும் தெளிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞரின் சமூக பொருளாதார அமிசம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தரின் ஆக்கங்களிற் காணப்படும் கவித்துவம் பற்றிக் கவிதை இயல் ரீதியிலே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தரின் இலக்கியங்களிற் காணப்படும் கற்பனை, சொல்வளம், ஓசைநயம், அணிநயம், சுவைகள் முதலானவை பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டு ஓப்பீட்டு அடிப்படையிலே புலவரின் கவித்துவம் நோக்கப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தரின் இலக்கியங்களிற் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைப் பற்றி இனங்கண்டு குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பொருத்தபாடு பற்றியும் நோக்கப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தருக்கும் அவர்காலத்துப் புலவர்களுக்குமிடையே நிலவிய புலமை ஊடாட்டம் பற்றி ஆய்வு செய்ததோடு ஒட்டக்கூத்தரின் சிறப்பியல்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நிறைவாக தமிழ் இலக்கியவரலாற்றில் ஒட்டக்கூத்தர் பெறும் இடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. |
en_US |