dc.description.abstract |
மொழியியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் தமிழ் - யப்பானிய மொழிகளுக்கிடையில் ஒற்றுமைப்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. பண்பாட்டு ஒற்றுமை பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக அகப்பொருள் மரபு பற்றி அவை ஒப்புநோக்கப்பட்டுள்ளன. இவ்வொப்பீட்டின் மூலம் சங்க–மனயோசுக் காதற் பாடல்களுக்கிடையில் பல ஒற்றுமைப்பாடுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மேலும் தொல்காப்பியரின் அகப்பொருள் இலக்கணம் மன்யோசுப் பாடல்களுக்கும் பொருந்தி நிற்பதையும் உணரமுடிந்தது. இக்கருத்துக்களை விரிவாக ஆராயும் நோக்கமே “சங்க–யப்பானிய காதற் பாடல்களின் பொருள் மரபு பற்றிய ஒர் ஓப்பீடு” என்ற ஆய்வுக்கட்டுரையாக விரிவடைந்தது. சங்கப் பாடல்களும் யப்பானிய மன்யோசுப் பாடல்களும் முதல், கரு, உரி என்ற அகப்பொருள் மரபின் அடிப்படையில் வகைப்படுத்தி ஆராயப்பட்டுள்ளன. இருமொழி அகப் பாடல்களையும் நுண்ணாய்வு நிலைநின்று ஒப்பீட்டு ஆராய்ந்தபோது சில முக்கிய கருத்துக்களைப் பெறமுடிந்தது. இயற்கையோடு இணைந்த வாழ்வியல் நடைமுறைகள் இரு நாட்டவர்கள் மத்தியிலும் பொதுவான பண்பாகக் காணப்படுகின்றன. மனிதவாழ்வியலும் இயற்கையும் பாடல்களின் அடிப்படை மரபாக அமைந்துள்ளன. பிறமொழி இலக்கியங்களிலும் இயற்கை வருணனைகள் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆனால் காதல் உணர்வுகளை இயற்கையின் பின்னணியில் வைத்துக் கூறுவது இருமொழி இலக்கியங்களின் பண்பாக அமைந்துள்ளது. தமிழ் அகப்பொருள் மரபு யப்பானியர் அகப்பொருள் மரபுடன் ஒற்றுமையுற்றிருப்பதைத் தெளிவாக உணரமுடிகின்றது. இயற்கையுடன் காதலைப் பிணைத்துக் கூறும்போது வெளிபாட்டு முறையில் உள்ள நுண்ணிய வேறுபாடும் இவ்வாயின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. தொல்காப்பியம் போன்ற அகப்பொருள் இலக்கணம் யப்பானிய மொழியில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அகப்பொருள் மரபு யப்பானியர் வாழ்க்கையில் இருந்ததை மன்யோசுப் பாடல்கள் காட்டுகின்றன. யப்பானிய மன்யோசுப் பாடல்கள் பொருளாழம் மிக்கவை. மன்யோசுப் பாடல்களை விளங்கிக்கொள்வதற்கு அகப்பொருள் இலக்கணம் அமைந்திருக்கவேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழ் -யப்பானிய நாட்டவரிடையே மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒற்றுமை இருப்பதனால் தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தை மன்யோசுப் பாடல்களை விளங்கிக்கொள்ள துணையாக கொள்ளலாம். தோல்காப்பியரின் அகப்பொருள் மரபு யப்பானியமொழி இலக்கியங்களுக்குப் பொருந்துவதை மேலும் விரிவான ஆய்வின் முலம் எடுத்துக்காட்டலாம். சங்க அகப்பாடல்களைப் போன்று மன்யோசுப் பாடல்களுக்கும் திணைத்துறை வகுப்பினை அமைத்துக் கொள்ளமுடியும். மாதிரிக்காகச் சில பாடல்கள் இவ்வாய்வில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மன்யோசுப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராயவுள்ளவர்களுக்கு இவ்வொப்பீட்டாய்வு பயனுடையதாக அமையும். |
en_US |