Abstract:
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிரந்தி வராமல் தடுப்பதில் கிரந்தி எண்ணையின் செயல்திறன் பற்றி அவதானிக்கின்ற விவரண ஆய்வாகும். (Observational Descriptive Study) இவ் ஆய்வானது யாழ் மாவட்டத்திலே உள்ள மூன்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் உள்ள 18 மருத்துவ மாதுப் பிரிவுகளில் புரட்டாதி மாதம் 1999ம் ஆண்டு முதல் பங்குனி மாதம் 2001ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் செய்யப்பட்டதாகும். மேற்படி பிரிவுகளில் 600 குழந்தைகள் மருத்துவமாது பதிவேட்டின் மூலமாக தெரிவுசெய்யப்பட்டு அக்குழந்தைகளை தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு தரிசித்ததன் பேறாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளரினால் கேள்விக்கொத்து மூலம் தேவையான தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேற்படி ஆய்வில் தெரிவுசெய்யப்பட்ட 600 குழந்தைகளில் ஆண்கள் 327 (54.5%)> பெண்கள் 273 (45.5%) ஆகும். இவர்களுக்கு கிரந்தி எண்ணையை உட்பிரயோகமாகவும், வெளிப்பிரயோகமாகவும் பாவிக்கப்பட்டது. மேற்படி குழந்தைகளில் 517 (86.2%) கிரந்தி எண்ணையை உபயோகித்தனர். 83(13.8%) குழந்தைகள் கிரந்தி எண்ணையை உபயோகிக்கவில்லை. ஆய்விலே 95 குழந்தைகள் (15.8%) கிரந்திநோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதில் கிரந்தி எண்ணை உபயோகிக்கும் 517 குழந்தைகளில் 42 குழந்தைகள் (8.1%) கிரந்திநோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கிரந்தி எண்ணையை உபயோகிக்காத 83 குழந்தைகளில் 53 குழந்தைகள் (63%) கிரந்திநோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். (Chi.square test with Yates correction was used to evaluate. df= 1 x2= 3.0 P = 0.05 significant.) கர்ப்பகாலத்தில் சில உணவுவகைகளைப் பாவிப்பதற்கும் குழந்தை பிறந்தபின் அதற்கு கிரந்தி ஏற்படுவதற்கும் தொடர்பு காணப்படுகின்றது. இந்த உணவுகள் கிரந்தி நோயைத் தூண்டக் கூடிய உணவுகளாகக் கருதப்படலாம். ஆய்விலே எடுக்கப்பட்ட 600 குழந்தைகளில் 95 குழந்தைகளுக்கு (15.8%) கிரந்தி உண்டாகியுள்ளது. இவ்வாறு கிரந்தியை தூண்டக்கூடிய உணவுகள் பின்வருமாறு. கத்தரி(89.4%)> கடலை(86.3%)> தக்காளி(84.2%)> இறால்(66.3%) என்பனவாகும். இவை கிரந்;தி ஏற்பட்ட 95 குழந்தைகளின் கிரந்திற்கு காரணமாக இருந்தது. கிரந்தி உணவு உட்கொண்ட 395 தாய்மாரில் 88 குழந்தைகளுக்கு கிரந்தி உண்டாகி உள்ளது. 307 குழந்தைகளுக்கு கிரந்தி உண்டாகவில்லை. கிரந்தி உணவு உட்கொள்ளாத 205 தாய்மாரில் 7 குழந்தைகளுக்கு கிரந்தி உண்டாகியுள்ளது. 198 குழந்தைகளுக்கு கிரந்தி உண்டாகவில்லை. எனவே கிரந்தி உணவு உண்போர்களில் கிரந்திநோய் ஏற்படும் தடவைகளை அறிவதற்கு புள்ளிவிபரவியல் கணிப்பிலே சார்பு இடர்பாட்டு (Relative Risk) பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பிரகாரம் கிரந்தி உணவு உண்பவர்களில், கிரந்தி உணவு உட்கொள்ளாதவர்களைவிட 6.5 தடவைகள் கிரந்திநோய் உண்டாவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. ஆய்விலே கிரந்தி நோயானது குழந்தை பிறந்து நான்கு மாதத்திற்குள்ளேயே கூடுதலாக பீடிக்கின்றது. கர்ப்பகாலத்தில் தாயானவள் உண்ணும் உணவுகளில் கத்தரி, கடலை, தக்காளி, இறால் என்பவை கிரந்திநோயை ஊக்குவிக்கின்ற காரணிகளாக அமைவது அவதானிக்கப்பட்டடுள்ளது. கிரந்திநோயை வராமல் தடுப்பதற்கும், கிரந்தி எண்ணெய்க்குமிடையே தொடர்பு இருக்கின்றது. எனினும் அதை உறுதிப்படுத்துவதற்கு நோயாளியில் மேற்பார்வை செய்கின்ற (Case Control Study) ஆய்வு செய்ய வேண்டும்.