Abstract:
புராணங்கள் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் சமயம், தத்துவம் என்னும் நிலைகளிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இலக்கிய நோக்கிலும் சில ஆய்வுகள் இடம் பெற்றுள்ளன. வடமொழிப் புராணங்களில் ஒன்றான அக்கினி புராணத்தின் இலக்கிய அம்சங்களை ஆராய்வதென்கின்ற முன்முயற்சியாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இப்புராணத்தின் மொழிநடை, இலக்கிய அம்சங்கள் என்பன சிறப்பாக ஆராயப்பட்டு இதனுடைய தனித்துவமான இலக்கியபண்புகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதில் புலப்படுத்தப்படுகின்ற காவிய இயல் அம்சங்கள் ஆராயப்பட்டு, குறிப்பிட்ட சில காவியவியல் நூல்களில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகளுடன் அக்கினி புராணத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் இணைந்தும் மாறுபட்டுமுள்ள தன்மைகள் பற்றியும் ஒப்பீட்டு ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக காவிய இலட்சணம், அலங்காரங்களில் சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் பற்றிய கொள்கைகள் புராணத்தில் கூறப்பட்டவாறு காவியவியல் நூல்களில் காணப்படும் தன்மையும் சப்தலாங்காரத்தில் சித்ரம் என்பதன் ஏழு உபபிரிவுகளைப் புராணம் கூறுகின்ற சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அர்த்தலாங்காரத்தின் பன்னிரெண்டு வகைகளை எட்டுப்பிரிவுகளாக புராணம் கூறுகின்ற தன்மையும் இவற்றை பரதர் நான்கு வகைவகையாகவும் பாமகர் மூன்றுவகையாகவும் கூறுவதும் ஒப்பீட்டு ஆராயப்பட்டுள்ளது. சப்தார்த்தலாங்காரம் பற்றிய எண்ணக்கரு காவியவியல் நூல்களில் காணப்படினும் அக்கினிபுராணத்தில் முதன் முதலாக தனித்துவமாக சப்தார்த்தாலங்காரம் விரித்துக் கூறப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அக்கினி புராணத்தில் தனித்துவமாக கூறப்படுகின்ற காவியத்தினுடைய குணங்கள், தோஷங்கள் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. சப்தகுணங்களில் ஓஜஸ்குணமானது பத்தியத்தினுடைய (செய்யுள்) உயிர் என புராணம் கூறுவதும், தண்டியும் போஜரும் இதனை கத்தியத்தின் (உரைநடை) உயிர் எனக்குறிப்பிடுவதும் காவியதோஷங்களை புராணமும் வாமனரும் நேரிடையான தன்மையில் கூறுவதும் ஏனைய காவிய இயல் நூல்களில் எதிரிடையான தன்மையில் தோஷங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதும் எடுத்ததுக்காட்டப்பட்டுள்ளது. புராணத்தில் வகைப்படுத்தப்பட்ட முறையில் பரதர், பாமகர், வாமனர் ஆகியோர் தோஷங்களை வகைப்படுத்தியுள்ளமை இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அலங்கார சாஸ்திரங்களுள் இவ் அக்கினி புராணம் முதன்மையாக விளங்கும் தன்மையும் நோக்கப்பட்டுள்ளது. பின்வந்த வடமொழிக் காவியவியலாளர்கள் காவியநூல்களை அமைக்கின்ற முறைமைக்கு அக்கினிபுராணம் முன்னுதராணமாக விளங்கும் வகையில் இங்கு இலக்கிய அமிசங்கள் பாகுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. காவியவியலின் ஒவ்வொரு கொள்கைகளினதும் அடிப்படை வளர்ச்சிநிலை பற்றிய சிந்தனைகளுக்கு அக்கினி புராணம் ஆதாரமாக விளங்கியுள்ள தன்மையும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. அக்கினிபுராணம் அலங்கார சாஸ்திரங்களின் அடிப்படைகள் பலவற்றைச் சிறப்பாகக் கொண்டு விளங்குவதும் தனித்துவமான இலக்கிய அமிசங்களைக் கொண்டிருப்பதும் இவ்வாய்வினூடு நிறுவப்பட்டுள்ளது.