Abstract:
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்ச்சி மைய கலைத்திட்டத்தினால், பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வியமைச்சு, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அனுசரணையுடன் பல்வேறு திட்டங்களை (GEP2, ஆசிரிய நூலகர் நியமனம், etc.) முன்னெடுத்து வருகிறது. இருப்பினும், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அவற்றின் வினைத்திறன்மிக்க செயற்பாட்டிற்காக நூலகப் பொறுப்பாளர்கள் பல்வேறு சவால்களின் மத்தியில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நூலகப் பொறுப்பாளர்கள் பாடசாலை நூலகக் கற்றல் வள் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றைத் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். அதற்காக யாழ்ப்பாண கல்வி வலயத்தைச் சேர்ந்த கோப்பாய் கோட்டத்திலுள்ள 1AB, 1C, Type II பாடசாலைகள் (n=23) ஆய்விற்காக தெரிவுசெய்யப்பட்டு, அங்கு கடமையாற்றும் நூலகப் பொறுப்பாளர்களிடமிருந்து வினாக்கொத்தின் மூலம் பாடசாலை, மற்றும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் (நூலக நிதி, நூலக உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் வளச்சேர்க்கை, ஆளணி, நூலக ஒழுங்கமைப்பு, நூலக சேவைகள்) தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டன. மேலதிக தகவல்கள் நேரடி அவதானம், மற்றும் அதிபர், நூலகப் பொறுப்பாளர்களுடனான நேர்காணல்களின் மூலம் பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் வகைப்படுத்தப்பட்டு, புள்ளிவிபரவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பெறுபேறுகள் அட்டவணைகள், மற்றும் வரைபடங்களை பயன்படுத்தி அறிக்கையிடப்பட்டுள்ளன.