Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9514
Title: | அமரர் மரியசேவியர் அடிகளாரின் ‘காவிய நாயகன்’ காட்சி நாடகமும் கிறிஸ்தவ மானிட விழுமியங்களும் |
Authors: | Suji, A.G. Paul Rohan, J.C. |
Keywords: | காவிய நாயகன்;திருமறைக் கலாமன்றம்;திருப்பாடுகளின் காட்சி;நாடகம்;மரியசேவியர் அடிகளார்;மானிடம் |
Issue Date: | 2022 |
Publisher: | University of Jaffna |
Abstract: | ஈழத்துக் கத்தோலிக்க கலை இலக்கிய வளர்ச்சியில் அமரர் மரியசேவியர் அடிகளாருக்கு பெரும்பங்குண்டு. அவர் கலைவழியாக இறைபணியாற்றும் குறிக்கோளுடன் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தார். அவரால் உருவாக்கப்பட்ட திருமறைக் கலாமன்றமானது பல்வேறு கலை இலக்கியப் பணிகளையும் சமூக மேம்பாட்டுப் பணிகளையும் ஆற்றிவருகின்றது. அப்பணிகளில் ஒன்றாக இறைமகன் இயேசுவின் ‘திருப்பாடுகளின் காட்சி’ எனப்படுகின்ற நாடக மரபினை நிகழ்த்தி வருகின்றது. அதனை உயர்ந்த கலைப்பெறுமானத்திற்குரியதாக வளர்த்து வருகின்றது. திருப்பாடுகளின் நாடக மரபானது மத்தியகால ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்காலப் பகுதியில் இயேசுவின் பாடுகள், மரணத்தினை தரிசித்து, தியானித்து மனந்திரும்புவதற்கான பக்திச் சடங்காக திருப்பாடுகளின் காட்சி நாடகம் நிகழ்த்தப்படுகின்றது. திருப்பாடுகளின் காட்சி நாடகத்தினை தமிழுக்குரிய இலக்கிய நேர்த்தியுடனும் மொழிநடையுடனும் முதலில் தமிழில் எழுதியவர் அமரர் மரியசேவியர் அடிகளே. 1964ம் ஆண்டிலிருந்து அடிகளார் திருப்பாடுகளின் காட்சி நாடகங்களை புதிதாக எழுதி மேடையேற்றினார். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் நாடு கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் அவரால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் நீட்சி பெற்றுள்ளது. “பாஸ்கு என்றால் சவிரிமுத்து சுவாமியின் (மரியசேவியர்) பாஸ்தான்” என மக்கள் கூறிக்கொள்ளும் பாரம்பரியம் இன்றும் நிகழ்கின்றது. அடிகளாரின் திருப்பாடுகளின் காட்சி நாடகங்களுள் காவிய நாயகன் திருப்பாடுகளின் காட்சி நாடகமானது ஒரு பக்தி நிகழ்வு என்பதனை தாண்டி கலைத்துவ அம்சங்கள் அனைத்தும் நிறைந்த கலைமரபாக வெளிப்படுகின்றது. அத்துடன் ‘நாடகம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கலை’ என்பதற்கு ஒப்பாக சமகால வாழ்வியலோடு இணைந்த வடிவமாகவும் திகழ்கின்றது. அதனால் இந்த ஆய்வானது காவிய நாயகன் திருப்பாடுகளின் காட்சி நாடகத்தையும் அதில் வெளிப்படும் கிறிஸ்தவ மானிட விழுமியங்களையும் ஆய்வு செய்கின்றது. கிறிஸ்தவ சடங்குசார் கலை மரபாகிய திருப்பாடுகளின் நாடகமுறையை தனியே சடங்காக மட்டுமன்றி அதனை சமூக மேம்பாட்டிற்காகவும், மனிதத்துவ விழுமியங்களை வளர்க்கும் வடிவமாகவும் மாற்றியவர் அமரர் மரியசேவியர் அடிகளார் என்பதை வெளிப்படுத்தும் நோக்குடன் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமரர் மரியசேவியர் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் கலைவழி நின்று இறைபணியாற்றியமையை ஆராய்கின்றது. குறிப்பாக அடிகளார் பங்குப் பணித்தளங்களில் ஆற்றிய கலைப் பணிகள், அவருடைய எழுத்துருவாக்கம், படைப்பாளுமை மற்றும் அவரால் எழுதப்பட்ட நூல்கள் என்பவற்றை தொகுத்துத் தருகின்றது. காவிய நாயகனின் காட்சிப்படுத்தல் பாங்கினையும், நாடகத்தில் வெளிப்படும் மானிடப் பண்புகள் என்பனவும் ஆராயப்பட்டுள்ளது. காவிய நாயகன் திருப்பாடுகளின் காட்சி நாடகம் சிறந்த கலைப்படைப்பு ஒன்று கொண்டிருக்க வேண்டிய அனைத்து சிறப்புப் பண்புகளையும் உள்வாங்கி மேடையேற்றப்பட்டுள்ளமை இங்கு புலப்படுகின்றது. அத்துடன் மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்ணிய உரிமை, விளிம்பு நிலை மக்களின் நேசிப்பு ஆகிய மானிடப் பண்புகளை ஆராய்கின்றது. மனிதத்தோடு இணைந்த இறைவடிவமாக வெளிப்படுகின்றது. இதில் நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ விழுமியங்கள், பண்பாட்டு மயமாக்கல், உளவள ஆற்றுப்படுத்தல், சமூக விழிப்புணர்வு மற்றும் மனிதமும் இறைவடிவமும் என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இயேசுவின் பாடுகளையும் அர்ப்பணிப்புக்களையும் கூறவந்த காவிய நாயகன் திருப்பாடுகளின் காட்சி நாடகம் ஒரு படி மேலே சென்று ஈழ மண்ணினதும் மக்களதும் வாழ்நிலை அவலங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை கூற விளைந்துள்ளமை வெளிப்படுகின்றது. இதன்படி புதியதோர் கிறிஸ்தவ மானிட விழுமியங்களை நோக்கிச் செல்வதற்கும் வழிகாட்டி உள்ளது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9514 |
Appears in Collections: | Christian & Islamic Civilization |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
அமரர் மரியசேவியர் அடிகளாரின் ‘காவிய நாயகன்’ காட்சி நாடகமும் கிறிஸ்தவ மானிட விழுமியங்களும்.pdf | 829.87 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.