Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9393
Title: பண்களும் அவற்றுக்கு இணையான தற்கால இராகங்களும்
Authors: Janany, S.
Keywords: பண்கள்;இராகங்கள்;தேவாரங்கள்;கர்நாடக இசை;பண்ணிசை
Issue Date: 2022
Publisher: University of Jaffna
Abstract: இசையானது மன அமைதியையும் ஆனந்தத்தையும் தரவல்லது ஆகும். ஆதியிலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த பல்வேறு ஒலிகளைப் பிறப்பித்தான். அவன் ஒலியினை முறைப்படுத்திய போது இன்னொலி என்னும் இசை பிறந்ததைக் கண்டான். இவ்வாறு பிறந்த இசையானது முதலில் ஓரிரு ஸ்வரங்களைக் கொண்டதாகவும், இதன் பின்பு மூன்று, நான்கு, ஐந்து ஸ்வரங்களைக் கொண்டதாகவும் வளர்ந்தது. பழங்காலத்தில் முதன் முதலில் இருந்த ஐந்திசைப் பண்கள் இதற்கு உதாரணங்களாக விளங்குகின்றன. இறுதியில் ஏழு ஸ்வரங்கள் தோன்றி ஏழிசையாக உருவாகியது. இதுவே பெரும்பண் என அழைக்கப்படுகிறது. அருவியின் ஓசையிலே தாளம் இருப்பதைக் கண்ட மனிதன் இசையுடன் தாளத்தையும் இணைத்தான். பண் என்பது பண்ணுதல் எனப் பொருள்படுகிறது. அதாவது வரன்முறை செய்யப்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட இசை ஆகும். இந்திய இசையில் கூறப்படும் இராகங்கள் என்னும் பதத்தினைப் பழந்தமிழ் மக்கள் பண் என அழைத்து வந்தனர். பண்களை இசைக்கும் ஆண்களைப் பாணர்கள் என்றும் பெண்களை பாடினியர் என்றும் அழைப்பர். பழங்காலத்தில் பண்படுத்தி வளர்க்கப்பட்டு வந்த பிற்காலத்தில் வெவ்வேறு பெயர்களுடன் மாற்றமடைந்துள்ளன. இவை தற்காலத்தில் இராகங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை பழங்காலத்தில் எழுந்த பண்கள் தான் என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்வானது வரலாற்று ஆய்வாகவும், விவரண ஆய்வாகவும் அமைகிறது. ஆய்வு முடிவுகளை நோக்குமிடத்து இயலிசைத் தமிழ்வல்ல அருளாளர்கள் இறைவனைப் போற்றிப் பரவிய தெய்வ இசைப் பாடல்களே தேவாரங்களாகும். இப்பாடல்கள் திருக்கோயில்களில் பண்ணுடன் பாடப்பெற்றன. காலப்போக்கில் இம்முறை நலிவுறவே தமிழிசைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ராஜராஜ சோழனின் முயற்சியால் தேவாரத்திருவேடுகள் எடுக்கப்பெற்று பண்முறையாகத் தொகுக்கப்பட்டது. தேவார முதலிகள் கையாண்டு வந்த பண்களுள் தற்காலத்தில் 23 பண்களே வழக்கில் உள்ளன. ஆயினும் கர்நாடக இசையில் எண்ணிலடங்கா இராகங்கள் கையாளப்படுகின்றன. எது எவ்வாறாயினும் தற்கால இராகங்களுக்கு அடிப்படையாக இருந்தது பண்டைத்தமிழ் பண்களாகும். காலப்போக்கில் பண்ணிசையின் இனிமையால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேற்று மொழியாளர்கள் தத்தம் மொழிகளில் இந்தப் பண்களை ஆதாரமாக வைத்துப் பாடல்களைப் பாடினர். இதன் விளைவாக பண்ணிசை மருவி கர்நாடக இசை ஒப்பற்ற ஆற்றல் படைத்த இசையாக வளர்ச்சி பெற்றது. இதுவே தற்காலத்தில் எண்ணிலடங்காத இராகங்களாக வளர்ச்சி பெற்று கர்நடக இசையாக வளர்ந்து வளர்கின்றதென்பதை இவ்வாய்வு ஆராய்கிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9393
ISBN: 978-624-6150-11-2
Appears in Collections:IHC2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.