Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9347
Title: சங்ககால பண்பாட்டு மரபுகளை இன்றும் தொடரும் வரணி மாசேரி புராதன குருநாதர் கோயில் – ஓர் ஆய்வு
Authors: Kamalanathan, S.K.
Keywords: சங்ககாலம்;பண்பாடு;குருநாதர் கோயில்;தமிழகம்;ஈழம்;வரணி
Issue Date: 2022
Publisher: University of Jaffna
Abstract: தமிழர்களது பண்பாட்டுக் கூறுகளின் வளர்ச்சியில் தொடக்கமாக விளங்குவது சங்ககாலமாகும். தமிழகத்தில் சங்கம் அமைத்து அறிவுடைநிலையில் தமிழ் வளர்ந்தது இக்காலமாகும். இதற்குரிய பண்பாடு, அயற்பிரதேசங்கள் எங்கும் வேரூன்றியது. அவ்வகையில் ஈழத்திருநாட்டிலும் செல்வாக்குப் பெற்றதை ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. ஈழம் முழுவதும் பரவிய போதும் வரணியில் அவை ஆழமாக ஊடுருவி இன்றுவரை பேணப்படுவதை புராதன குருநாதர் கோயிலில் அவதானிக்க முடிகிறது. அதனை வெளிக் கொண்டு வருவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்விற்கு இந்திய ஈழத்து இலக்கிய மூலாதாரங்கள், ஆய்வுக் கட்டுரைகள், தொல்பொருட் சான்றுகள், நேர்காணல், களஆய்வுத்தகவல்கள் சான்றாதாரமாகின்றன. இது ஒரு வரலாற்றுப் பண்பாட்டாய்வாகவும் ஒப்பீட்டு விபரண ஆய்வாகவும் விளங்குகிறது. இது ஓர் ஆவணப்படுத்தல் ஆய்வாகவும் உள்ளது. மேலும் தமிழகப் பண்பாடுகள் ஈழத்தின் பூர்வீக்க் குடிகளான நாகர்களுடைய பண்பாடுகளுடன் இணைந்து வளர்ந்ததையும் இவ்வாய்வின் மூலம் அறிய முடிகின்றது. மேற்குறிப்பிட்ட வகையிலே வரணியானது இத்தொடர்பில் தனித்துவமான இடத்தைப் பெறுவதை அவதானிக்கலாம். குறிப்பாக பெருங்கற்கால, சங்ககாலப் பண்பாடுகளை வரணி, மாசேரி புராதன குருநாதர் கோயில் காலம் காலமாகப் பேணிவருவதை இந்த ஆய்வின் மூலம் தெளிவாக அறியமுடிகிறது. மேலும் இத்தொடர்பு நீண்ட பரிமாணத்தை உடையதை அவதானிக்கலாம். இந்த ஆலயத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட வெள்ளிவேல்களை வாழைக்காயில் குற்றி மயில் தோகை விரித்திருப்பது போல வழிபடுகின்றனர். அவற்றுள் பல்லவர் காலத்திற்குரிய கூர்நீளமான வேல்கள் உள்ளன. மாசேரி என்ற பெயர், மற்றும் ஆதியியல் கோயில் இருந்த இடத்தில் சோழர் நாணயம் கிடைத்தமை, இவ்வாலயத்தை வேளைக்காரப்படையும் பூசித்த்தைக் குறிக்கும் சோழன் மாசேரி, வேளையார்புலம் எனும் இடப்பெயர்கள், கோயிலிலுள்ள புராதன சோழர்கால வெண்கலச்செம்பு போன்ற பல சான்றுகள் உள்ளன. மேலும் நாயக்கர் மரபில் பிரசித்தி பெற்றதை அக்காலத்தில் வரையப் பெற்ற திரைசீலை ஓவியம் சான்றாதாரத்துடன் விளக்கி நிற்கின்றது. மேலும் வரணிக்கும் வேதாரண்யத்திற்குமான தொடர்பு சரபோஜி மகாராஜா காலத்தில் தில்லைநாயக்கத் தம்பிரானால் வரணி ஆதீன உருவாக்கமும், சிதம்பரத்தில் வரணி மடம் உருவானமை, சிதம்பரத்திற்கு வரணியில் இருந்த 2000 பரப்பிற்கு கூடிய வயல் நிலங்கள் என்றவாறான தொடர்புகள் காலத்திற்கு காலம் விரிவடைந்தமையைக் காணலாம். எனவே புராதன குருநாதர் கோயில் பெருங்கற்காலம், சங்ககாலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என எல்லாக் காலங்களிலும் தமிழக ஈழ உறவில் முக்கியம் பெற்றதுடன் இன்றுவரை சங்ககால, நாகமரபுகளைப் பேணி வருகின்றது என்றால் அதுமிகையன்று. எனவே தமிழக இலங்கைப் பண்பாட்டு உறவில் வரணி மாசேரி புராதன குருநாதர் கோயில் தனித்துவமான ஓர் இடத்தைப் பெறுவதைக் காணலாம். மேலும் சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து ஈழத்தில் செல்வாக்கு செலுத்திய பல்லவர், சோழர், நாயக்கர் போன்றவர்களது ஆட்சியிலும், அப்பண்பாடுகள் இணைந்து இன்றும் நிலைபெற்றுள்ள தன்மையை அறியவும், மேலும் பல ஆய்வுகளைச் செய்யவும் இந்த ஆய்வு திறவுகோலாக அமைகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9347
ISBN: 978-624-6150-11-2
Appears in Collections:IHC2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.