Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/751
Title: யாழ்ப்பாண வலயப் பாடசாலைகளில் சிரேஷ;ட இடைநிலை மட்ட மாணவர்களிடையேயான நெறிபிறழ்வுச் செயற்பாடுகள்
Authors: Jeyamalar , T.
Issue Date: 31-Dec-2012
Publisher: Ph.D. in Education
Abstract: மாணவ சமுதாயத்தைச் சிறந்த முறையில் வழிப்படுத்தி அவர்களை எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உருவாக்குவதில் பாடசாலைகள் முக்கிய பங்காற்றவேண்டிய தேவை உள்ளது. இன்று சமூகத்தில் இயல்பாகத் தோன்றும் பிரச்சினைகளும், தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் மாணவர்கடையே விரும்பத்தகாத நடத்தைக் கோலங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிரேஷ்ட இடைநிலை மட்ட மாணவர்களது நடத்தைகள் தொடர்பாக அதிக கவனம் எடுக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. யாழ்ப்பாண வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது பரப்பளவு ஆய்வுமுறையில் இடம்பெற்றுள்ளது. எழுமாற்றுமுறை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில், சிரேஷ்ட இடைநிலைமட்ட வகுப்புகள் ஒவ்வொன்றிலும் கற்கும் 20%ஆன மாணவர்களும் அவ்வகுப்புகளில் கற்பிக்கும் 75%ஆன ஆசிரியர்களும், அம்மாணவர்களின் பெற்றோரும் ஆய்வின் மாதிரிகளாக இடம் பெற்றுள்ளார்கள். மேலும் குறிப்பிட்ட முத்தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், அவதானிப் புக்கள், வழங்கப்பட்ட வினாக்கொத்துக்கள மூலம் பெறப்பட்ட தரவுகள் போன்றவை விவரணப் பகுப்பாய்வு மூலமும் கருதுகோள்கள் பரிசோதனைமூலமும் கைவர்க்கச்சோதனை மூலமும் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன. பகுப்பாய்வின் மூலம் ஆய்வுப் பிரதேச பாடசாலைகளின் நெறிபிறழ்வு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டு, பலங்கள், பலவீனங்கள் உணரப்பட்டன. மேலும் முக்கிய பெறுபேறுகளாகக் கற்றலுக்கேற்ற உளஆரோக்கிய நிலையில் 21.78%ஆன மாணவர்களே நிறைவான நிலையைக் கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கற்றலுக்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களாக இனங்காணப்பட்டனர். ஆசிரியர்களில் பெரும்பாலானோர் (79%) கட்டுப்பாடுகளிலும் சட்டதிட்டங்களிலும் நம்பிக்கை வைத்தவர்களாக காணப்படுகின்றார்கள். பெற்றோர்களில் 75% மானவர்களே பாடசாலையுடன் தொடர்புகளைப் பேணுபவர் களாக உள்ளனர். இந்நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தீர்வுகளாக, கற்றலின்பால் ஈடுபாட்டைக் காட்டக்கூடிய விதத்தில் பாடசாலைச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல், ஆசிரியர் - மாணவர், ஆசிரியர் - பெற்றோர், அதிபர் - பெற்றோர் ஆகியோருடனான தொடர்பாடல்களை ஏற்படுத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தல், ஆன்மீகச் செயற்பாடுகள், பிரார்த்தனைகள் போன்ற நியமம்சார் செயல்களை வலுப்படுத்தல் போன்றவை இனங்காணப்பட்டன. இப்பெறுபேறுகளின் அடிப்படையில் ஆய்வுகளுக்கான எதிர்கால ஆலோசனைகளாக கனிஷ்ட நிலை மாணவர்களின் நெறிபிறழ்வு தொடர்பாக ஆய்வு செய்தல், கிராம நகர வேறுபட்டிற்கேற்ப நெறிபிறழ்வுச் செயற்பாடுகளை அளவிடுதல், பாடசாலை வரவு ஒழுங்கினம், அமைதியின்மை, கீழ்ப்படியாமை, சீரற்ற தொடர்பாடல் போன்றன தவிர்ந்த ஏனைய நெறிபிறழ்வுச் செயற்பாடுகளை இனங்காணலும் அவற்றுக்கான பின்புலங்களை அறிதலும், பிள்ளைகளின் சீரான நடைத்தைகள் ரீதியில் ஆசிரியர், பெற்றோரின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தல் போன்றன தொடர்பான ஆய்வுகள் இடம்பெறுதல் வரவேற்கத்தக்கது. இவற்றின் மூலம் எமது பிரதேச மாணவர்களின் நடத்தை சீராக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேற்படி ஆய்வானது ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. முதலாவது இயலில் நெறிபிறழ்வு பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது இயலில் நெறிபிறழ்விற்கான பின்னணி, உளவியற் காரணிகள், மாணவர்களின் பாடசாலைச் செயற்பாடுகள் பற்றிய வெளிப்படுத்தல்கள் என்பன தொடர்புடைய இலக்கிய மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது இயலில் ஆய்வின் குறிக்கோள்கள், கருதுகோள்கள், தரவு சேகரிப்பு நுட்பங்கள், தரவுப் பகுப்பாய்வு முறைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. நான்காவது இயல் தரவுப்பகுப்பாய்வினையும் வியாக்கியானத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஐந்தாவது இயல் தீர்வுகளையும் ஆலோசனைகளையும் கொண்ட முடிவுரையாக இடம்பெற்றுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/751
Appears in Collections:Research Publication- FGS

Files in This Item:
File Description SizeFormat 
Ph.D. in Education - Mrs.Jeyamalar Thiahalinham.pdf158.47 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.