Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5794
Title: சிவில் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் சீனாவின் ஆதிக்கம்
Authors: Arunthavarajah, K.
Keywords: சர்வதேச தாக்கங்கள்;இராஜதந்திர உறவு;வரலாற்று ரீதியான தொடர்பு;சிவில் யுத்தம்;மேற்குலகம்
Issue Date: 2022
Publisher: University of Jaffna
Abstract: ஆய்வின் நோக்கம்: இலங்கையானது சிவில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னராக சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பின் இயல்புகளை அடையாளங்காணுதல், இத்தகைய சீனா சார்பான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது சர்வதேச அளவில் ஏற்படுத்திவருகின்ற தாக்கங்களை அடையாளப்படுத்துதல், சிறுபான்மையின மக்களது அரசியலில் இத்தகைய உறவின் பாதிப்புக்களைக் கண்டறிதல், எதிர்காலத்தில் இத்தகைய இலங்கை பின்பற்றி வருகின்ற வெளிநாட்டுக் கொள்கையினால் ஏற்படப்போகின்ற ஆபத்துக்களை எடுத்துக்காட்டுதல் போன்றன ஆய்வினது பிரதான நோக்கங்களாக உள்ளன.ஆய்வு முறைகள்: சமூக விஞ்ஞான ஆய்வு முறைகளில் பண்புசார் முறைகளைப் பயன்படுத்திய வகையில் குறித்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக வரலாற்று அணுகுமுறை (historical approach), விளக்கமுறை ஆய்வு (descriptive methods) போன்ற ஆய்வு அணுகுமுறைகளினடிப்படையில் இவ்வாய்வானது செய்யப்படுகின்றது. குறித்த இவ்வாய்வினை நேர்த்தியான வகையில் மேற்கொள்வதற்கு முதல்நிலைத் தரவுகளும் இரண்டாம் நிலைத் தரவுகளும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல்நிலைத் தரவுகள் என்ற வகையில் கலந்துரையாடலகள், நேர்காணல்கள், அவதானிப்புக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகள் வரிசையில் பிற்பட்ட காலங்களில் குறித்த விடயமாக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், பிற பத்திரிகைச் செய்திகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: .இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலே வரலாற்று ரீதியான அரசியல், பொருளாதார பண்பாட்டு உறவுகள் இருந்து வந்துள்ளதனை வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய வரலாற்று ரீதியான இரு நாடுகளுக்குமிடையிலான உறவானது நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னரும் தொடர்ந்தது. அது இலங்கையின் 30 வருட சிவில் யுத்த காலத்தில் மேலும் நெருக்கமானது. சீனாவுடன் மட்டுமன்றி இக்காலப்பகுதியில் மேற்குலகுடனும் இலங்கையின் தொடர்பானது ஓரளவிற்கு சீனாவுடன் கொண்டிருந்த தொடர்பினை ஒத்த வகையிலேதான் அமைந்திருந்தது. இருந்தபோதும் போரின் பின்னதாக சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த தொடர்பினை மேலும் நெருக்கமாக்கியது. மேற்குலகத்துடனான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை புறந்தள்ளப்பட்டது. ஆய்வின் உட்கோள்கள்: இத்தகையதொரு பின்னணியில் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குறித்த இந்நாடுகள் தங்களது கவனத்தினைச் செலுத்தி இலங்கைக்குத் தலையிடியினைக் கொடுக்க ஆரம்பித்தன. எனவே இலங்கையானது தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதன் மூலமாகவே பிற நாடுகளதும் ஆதரவினைப் பெற்று முன்னோக்கிப் பயணிக்க முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5794
Appears in Collections:2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.