Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5161
Title: யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் மீனவக் குடும்பங்களின் வறுமை நிலை பற்றிய ஓர் ஆய்வு
Authors: Uthayakumar, S.S.
Sivatharsan, P.
Issue Date: 2012
Publisher: University of Jaffna
Abstract: இயற்கை அன்னையின் கொடைகளுள் மகத்தான வளமாகக் காணப்படும் கடல்வளத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளுள் மீன்பித்தொழில் முக்கியம் பெறுவதுடன், சர்வதேச ரீதியில் முக்கியத்துவமான தொழிலாகவும், உள்ளது. இவ்வகையில் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் பெருமளவில் காணப்படும் மீன்வளங்கள் இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.திட்டமிட்ட ஒழுங்கு முறையில் இவ்வளங்கள் பயன்படுத்தப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடல்சார் தொழில்துறையால் கணிசமான பங்களிப்பினை வழங்க முடியும். மீன்பிடித்தொழிலின் இயல்பானது மீனவக் குடும்பங்களிடையே வறுமையைத் தோற்றுவித்துள்ளது. வறுமை என்பது தீராத நோயாக மக்களிடையே பரவிக்காணப்படுகின்றது. இது உலக நிலையில் விரிவான பரிமாணத்தினைப் பெற்றுள்ளது. கல்வி மற்றும் சுகாதார ஆரோக்கியத்தில் குறைந்த நிலை, பொருட்களின் பற்றாக்குறை, அவற்றின் இழப்பு, மனிதவள இழப்பு,மக்களின் குரலுக்கு மதிப்பின்மை, அதிகாரமின்மை மற்றும் பல இழப்புக்களுக்கு உட்படல் என்பவற்றை உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கம் செய்யப்படடிக்கின்றது. அதாவது வறுமையானது பொருளாதார இயல்தகமைக் கருத்துக்களுக்கு அப்பால் சென்று அரசியலினதும் மனித உரிமைகளினதும் ஆக்கத்தினுள் நீடிக்கின்ற பரிமாணங்களை உள்ளடக்குவதாக அமைகின்றது. வறுமையானது நச்சு வட்டத்தன்மையில் இடம்பெறுகின்றது. இதனை வழிப்படுத்தும் காரணிகளாவன உணவு நெருக்கடி, வதிவிட நெருக்கடி, போசாக்கின்மை, தொற்று நோய் ஆபத்துக்கள், மனவடு போன்றனவாகும். இவ்வாறான நிலைப்பாடுகளினை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இத்தகைய காரணிகளின் பரிமாணங்களை ஆராய்வதாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கரையோரப் பிரதேசங்கள், அவற்றின் அமைவிடம், அமைப்பு, புவியியல் பின்னணிகள் போன்றன மீன்பிடித் தொழிலுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இருப்பினும் இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பொருளாதார நிலையோ அல்லது வாழ்வாதார நிலையோ பெரிதும் வறுமையிலேயே இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது வறுமை என்பது தனியொரு பிரச்சினையோடு நின்றுவிடவில்லை. அது ஒரு நச்சுவட்ட சுழற்சியில் இயங்குவதால் மக்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றனர். எனவே யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் மீனவக் குடும்பங்களின் வறுமை நிலையைப் பல்பரிமாண நோக்கில் ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வுக்கான ஆய்வுக்களமான ஆய்வுப்பிரதேசமானது இலங்கைத் தீவின் வடக்கே குறிப்பாக வடமாகாணத்தில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் ஒன்றான, யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கிய நிர்வாக மையப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டமைந்துள்ள 28 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவாக உள்ளது. நெடுங்குளம்(J/62), கொழும்புத்துறை கிழக்கு(J/63), கொழும்புத்துறை மேற்கு(J/64), பாசையூர் கிழக்கு(J/65), பாசையூர் மேற்கு(J/66), ஈச்சமோட்டை(J/67), திருநகர்(J/68), றெக்கிளமேசன் கிழக்கு(J/69), றெக்கிளமேசன் மேற்கு(J/70), குருநகர் கிழக்கு(J/71), குருநகர் மேற்கு(J/72) சின்னக்கடை போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்ற மீனவக்குடும்பங்களிடையே வறுமை நிலை பெருமளவில் காணப்படுகின்றது. இங்கு இயற்கையின் அனர்த்மும், யுத்தத்தின் விளைவுகளால் வந்த கடல்வலயத் தடைச்சட்டங்களும், அதனுடனான கட்டுப்பாடுகளும் இப்பிரதேச மக்களது பொருளாதார மேம்பாட்டிற்குப் பாரிய சவால்களாக அமைந்துள்ளன. எனவே இப்பிரதேச மீனவக் குடும்பங்களினது வறுமை நிலை பற்றிய ஆய்வானது அவநியமானதும் பயன்பாடுமிக்கதுமாகும். யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவிரல் வசிக்கின்ற 560250 பேரில் 35% ஆனவர்கள் மீனவக் குடும்பங்களாகவும், அவர்களில் 32 % ஆனவர்கள் மிகவறிய நிலையிலும் காணப்படுகின்றனர். இவர்களிடம் காணப்படும் வறுமையானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மீனவக் குடும்பங்கள் கூடுதலாக உள்ள கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறை போன்ற இடங்களில் 2010 ஆம் ஆண்டின் தரவின் படி மீன்பிடித்தொழில் சார்ந்த சனத்தொகை 14441 ஆகவும் இவர்களில் 4484 பேர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களாகவும், இவர்களில் 393 பேர் நிவாரணமாக (பிச்சைச்சம்பளம்) ரூபா 250/- உம், 176 பேர் ரூபா 300/- உம், 57 பேர் ரூபா 350/- உம், 37 பேர் ரூபா 400/- உம், 19 பேர் ரூபா 450/- உம், 12 போர் ரூபா 500/- உம் என்றவகையில் பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். இதிலிருந்து இப்பிரதேசத்தில் முழு வறுமையில் உள்ளோரின் பரம்பலை அறியமுடிகின்றது. இதைவிட இப்பிரதேசத்தின் கல்வி நிலையும் (11 கிராம சேவகர் பிரிவுகளில் பாடசாலைகள் எதுவும் இல்லை), ஆரோக்கிய நிலையும் மிகவும் குறைந்த நிலையிவேயே காணப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தில் மீனவக் குடும்பங்கள் வறுமை நிலையில் உள்ளதோடு, அவர்களிடம் காணப்படும் வறுமையானது, பல்வேறு பரிமாணங்களை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனவே இவ்வறுமை நிலையைக் குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் சுயதொழிலில் ஈடுபடலில் பங்களிப்பினை அதிகரிப்பதோடு, மக்களின் கலாசார வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்கம் வழிமுறைகளும் ஆராயப்பட்டுள்ளது. இதனை விட இவர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதோடு, இவர்களது வீட்டுவசதி, சுகாதார வசதி, உணவுப்பழக்கவழக்கங்கள், கல்வி அறிவு, முதலீடு, வருமானப்பங்கீடு, வாழ்க்கை முறைமை போன்ற பல காரணிகளை ஆராய்ந்து வறுமையைக் குறைப்பதற்கு இக்காரணிகளை எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. எனவே இப்பிரதேச மீனவக் குடும்பங்களின் வறுமையின் போக்கினையும் அதற்கான காரணங்களம் இனங்காணப்பட்டு, வறுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் அடையாளங்காணப்பட்டு, அவற்றை வெளிக் கொணர்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இவ்வகையில் இந்த ஆய்வானது எதிர்காலத்தில் இப்பிரதேச அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றம் கொள்கைகளை முன்வைப்பவர்களுக்கும் மிகவும் பயன் மிக்க ஆய்வாக உள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5161
ISSN: 2279-1922
Appears in Collections:Economics



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.