Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5080
Title: போர்த்துக்கேயர்கால இஸ்லாமியர்களது பொருளாதார நடவடிக்கைகள் - வட இலங்கையினை அடிப்படையாகக்கொண்ட ஒரு வரலாற்று நோக்கு
Authors: Arunthavarajah, K.
Keywords: ஆரம்பகால இஸ்லாமியக் குடியேற்றங்கள்;போர்த்துக்கேயர்;பொருளாதாரச்சுரண்டல்;முத்து வர்த்தகம்;யானை வர்த்தகம்
Issue Date: 2017
Abstract: தமிழ் பேசும் மக்களை அதிகளவில் உள்வாங்கிக்கொண்ட (ஏறத்தாழ 97சதவீதம் ) வடஇலங்கையினைப் பொறுத்தவரை அதனது வரலாற்றில் இஸ்லாமிய மக்களுக்கென (ஏறத்தாழ 3.22சதவீதம் ) தனியானதொரு சிறப்பும் வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டென்பதனை எவரும் மறுக்க முடியாது. பொதுவாகவே இவர்கள் தனியானதொரு இனக்குழுவாக காணப்பட்டிருந்தாலும் கூட இலங்கையில் அதுவும் குறிப்பாக வடஇலங்கையில் தமிழையே இவர்கள் தங்களது தாய் மொழியாகக் கொண்டுள்ளனரென்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆரம்பகால இஸ்லாமியர்களது வருகை, அவர்களது ஆரம்பகால குடியேற்றங்கள் என்பவை தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருவது போலவே வடஇலங்கையிலும் இவர்களது மேற்கூறப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக முரண்பட்ட தகவல்களே உள்ளன. இருப்பினும் வடஇலங்கையில் இவர்களது ஆரம்பகால குடியேற்றங்கள் யாழ்ப்பாண அரசர்களது காலமான ஆரியச்சக்கரவர்த்திகளது காலத்தில் ( கி.பி.13ஆம் நூற்றாண்டு ) நல்லூரினை அண்டிய பிரதேசங்களில் பரவலாக காணப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. ஆரம்பகாலங்களில் வர்த்தக நோக்குடனேயே இலங்கைக்கு வருகைதந்த இவர்கள் பின்னர் படிப்படியாக வடஇலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறினர். காலப்போக்கில் திருமணஉறவுகளையும் வளர்த்துக் கொண்டு நிரந்தரக் குடிகளாயினர். ஐரோப்பியரது வருகைக்கு முன்னரான காலப்பகுதியில் வடஇலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் யாவுமே யாழ்ப்பாண அரசர்களது மேற்பார்வையின் கீழ் இஸ்லாமியர்களது கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வந்தது. ஆனால் ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர்கள் வடஇலங்கையினை தமது கட்டப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையினைக் தொடர்ந்து (கி.பி1619) வடஇலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை போர்த்துக்கேயர் தாமே கையேற்று அவற்றினை நடாத்த முற்பட்டமையினைத் தொடர்ந்து வடஇலங்கையில் மட்டுமன்றி முழுஇலங்கையிலும் வாழ்ந்துவந்த இஸ்லாமியர்களது வாழ்வில் இருண்டகாலம் ஆரம்பித்தது எனலாம். இஸ்லாமிய மக்களின் அனேகர் தமது சுதந்திரத்தினை மத அடிப்படையில் மட்டுமன்றிச் சகல துறைகளிலும் இழக்க நேரிட்டது. சிலர் இடம்பெயர்ந்து மலையகம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இருப்பினும் போர்த்துக்கேயரது காலத்தில் முத்துக்குளித்தல், முத்துவர்த்தகம் மற்றும் யானை வர்த்தகம் போன்ற வடஇலங்கையில் இஸ்லாமியர்களது பாரம்பரியத் தொழில்களான இவற்றினை இஸ்லாமியர்களை விலக்கிவைத்துவிட்டு அவர்களால் திறம்பட செய்யமுடியவில்லை. ஆகையால் விரும்பியோ விரும்பாமலோ போர்த்துக்கேயரது காலத்தில் அவர்கள் இஸ்லாமியர்களை மேற்குறித்த தொழில்களில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இப்பின்னணியில் தான் அக்காலப்பகுதியில் இஸ்லாமியர்களும் இத்தொழில்களில் ஈடுபட்டுப் போர்த்துக்கேயரது பொருளாதார உயர்விற்கு வழிவகுத்தனர். சிலர் விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் திகழ்ந்தனர். வேறுசிலர் உள்நாட்டில் பல்வேறு கைத்தொழில்களைச் செய்தனர். மொத்தத்தில் வடஇலங்கையில் போர்த்துக்கேயரது பொருளாதார உயர்விற்குப் பக்கபலமாக இருந்தவர்களில் இஸ்லாமியர்களிற்கும் குறிப்பட்டதொரு பங்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்(சிற்றம்பலம்.சி.க.,1996 ) முழுக்கமுழுக்க வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் விவரண ஆய்வாக அமையப்பெற்ற இவ்வாய்வானது போர்த்துக்கேயர்கால இஸ்லாமிய மக்களது பொருளாதார நடவடிக்கைகளை இனங்காண்பதும் அத்தகைய நடவடிக்கைகள் வடஇலங்கையின் போர்த்துக்கேயரதுகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்விதமான பங்களிப்பினை செய்திருந்தது என்பதனையும் வருங்கால ஆய்வாளர்களிற்கு இவ்விடயமாக மேலதிகமான தகவல்களை வழங்கி அவற்றினை ஆவணப்படுத்துவதனையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. மேலும் இப்பகுதி தொடர்பாக இதுவரை எவரும் விரிவாக ஆராயவில்லை என்ற குறைபாட்டினையும் கூட இவ்வாய்வானது நிறைவு செய்கின்றது. இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாம்தர ஆதாரங்கள் ஆய்வினது தேவைகருதி பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்கள் வரிசையில் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கால இலக்கியங்கள் குறிப்புக்கள், அறிக்கைகள், கடிதங்கள் போன்றவை பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. முதற்தர ஆதாரங்களை அடிப்படையாக வைத்து பிற்பட்டகாலங்களில் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைகளது செய்திகள், இணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், இரண்டாம்நிலை ஆதாரங்கள் வரிசையிலும் இடம்பிடித்துள்ளன. பொதுப்படப்பார்த்தால் போர்த்துக்கேயர்கால வடஇலங்கையின் பொருளாதாரத்தில் இஸ்லாமியரது பங்களிப்பினை குறைத்துச் சொல்ல முடியாது. அவ்வகையில் அக்காலப் பகுதியில் இஸ்லாமியரது ஆதரவுடனேயே போர்த்துக்கேயர் தமது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதென்பது வெள்ளிடைமலை. (சிற்றம்பலம்.சி.க.,1995 )
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5080
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.