Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/420
Title: புலம்பெயர் தேசங்களில் தமிழ்ப் பண்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுதல்: 'முகங்கள்' சிறுகதைத் தொகுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு நிலை
Authors: Nanthakobalan, V.
Issue Date: 20-Jul-2012
Publisher: JUICE- 2012 University of Jaffna
Abstract: உலகில் எங்கெங்கு தேசவிடுதலைப் போராட்டங்களும் யுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றனவோ அங்கிருந்தெல்லாம் மக்கள் எதோவொரு வகையில் புலம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறானதொரு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஈழத்தமிழர் சமூகமும் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களை விட்டுப் புலம்பெயர்ந்தது. ஈழத்தமிழர்களின் இப்புலம்பெயர்வு தமிழிலக்கியத்தில் புலம்பெயர் இலக்கியம் என்ற புதிய பகுப்பை உருவாக்கியது. புலம்பெயர் படைப்பாளிகளது நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்பன தத்தம் அளவில் முழுமை பெற்றனவாகக் காணப்படுகின்றன. இவற்றுள்ளே புலம்பெயர்ந்த புதுச்சூழலில் புலம்பெயர்ந்தவர்களின் முகங்களை தோலுரித்துக்காட்டும் ஒரு முயற்சியாக ஐம்பது சிறுகதைகளை உள்ளடக்கிய முகங்கள் சிறுகதைத் தொகுப்பு விளங்குகின்றது. தமிழிலக்கிய வரலாற்றுப்போக்கிலே தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவும், தனித்துவமான ஒன்றாகவும் புலம்பெயர் இலக்கியம் திகழ்ந்து வருகிறது. ஈழத்துத் தமிழிலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத, அறிந்திராத புதிய அனுபவங்களை கலையழகியலுடன் முன்வைக்கின்ற ஒன்றாக புலம்பெயர் இலக்கியம் விளங்குகின்றது. புலம்பெயர் படைப்புக்களுள் கவிதைத் தொகுப்புக்களே அதிகமானவையாகும். எனினும் கவிதைகளுக்கு அடுத்ததாக அதிகம் வெளிவந்தவை சிறுகதைகளேயாகும். சிறுகதைகளினூடாக ஈழத்துத் தமிழ் மரபின் தொடர்ச்சியையும் புதிய பாய்ச்சலையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 1983-2004 வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ 80ற்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புக்கள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும் மேலைத்தேயப் பண்பாட்டுக் கூறுகளும் ஒன்றோடொன்று மோதும் நிலையில் நிகழும் உணர்வுத் தாக்கங்களை, பண்பாட்டுப் பிறழ்வுகளை எடுத்துக் காட்டுவனவாக முகங்கள் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அமைந்துள்ளன. எனவே இவை பற்றிய ஆய்வினை மேற் கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழிலக்கியம் திகழ்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் 1956 இலிருந்து தொடங்கிய புலம்பெயர்வானது இற்றை வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது ஒரு தேசிய இனத்தின் இருப்புக்கும் தேசியத்தை நிலை நிறுத்துவதற்கும் சுய மொழி இலக்கியத்தினுடைய பங்களிப்பு கணிசமானது. அந்த வகையிலே புலம்பெயர்ந்தோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பதிவு செய்யவும் முனைந்தனர். புலம்பெயர் இலக்கியம் தமிழிலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைத் தந்திருக்கிறது. நாங்கள் இதுவரை அறியாத தளங்களுக்குச் சென்றிருக்கிறது. இவ் இலக்கிய அனுபவங்கள் இதுகால வரையும் காணப்படாதவை. தமிழிலக்கியம் முழுவதற்கும் இது புதியதாகக் காணப்படுகிறது. ஈழத்துத் தமிழிலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சினைகளையும், வாழ்வனுபவங்களையும், பண்பாட்டு மாற்றங்களையும் இவ்விலக்கியத்தினூடகப் பேசுகின்றனர்.   இந்நிலையில் பல எழுத்தாளர்களது சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுதியினூடாக வெளிப்படுகின்ற தமிழ்ப் பண்பாட்டுக் கலாசாரத்தில் ஏற்பட்ட முரண் நிகழ்வுகளையும், பல பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழர் தம் மொழி, பண்பாட்டினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளின் தேவை குறித்தும் எடுத்துக் காட்டும் அதே வேளை படைப்பாளர்களது ஆளுமைகளை அவர் தம் படைப்புக்களினூடாக இனம் காண்பதும் இவ் ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வானது விபரண ஆய்வு முறையினை அடிப்படையாகக் கொண்டு மேற் கொள்ளப்படுகிறது. முகங்கள் தொகுப்பில் உள்ள சிறுகதைகளினூடாக புலப்படும் பண்பாட்டுப் பிறழ்வுகளையும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பண்பாடு என்ற சொல்லாக்கத்தினையும் தமிழ்ப் பண்பாடு என்ற சொல்லாக்கத்தினையும் விளக்குவதோடு தமிழர்களுக்கே உரிய பண்பாடுகளையும் அவை ஏனைய பண்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டித் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்தையும் சுட்டுவதோடு தமக்கென ஒரு பண்பாட்டுப் பாரம்பரியம் கொண்டவர்கள் புலம்பெயர் சூழல் தந்த சுதந்திரத்தினால் பல்வேறு பண்பாட்டுச் சிக்கல்கள், பிறழ்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகக் காணப்பட்டதனையும் தனிமனித ஒழுக்கப் பிறழ்வுகள், குடும்பம் என்ற அமைப்பு சிதைவடைதல், திருமண உறவு நிலையில் ஏற்படும் சிக்கல்கள், பெண்களது அநாகரிகமான போக்கு நிலை என்பன மாற்றப்பட வேண்டியன குறித்தும் முகங்கள் சிறுகதைத் தொகுப்பினூடாக ஆராயப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்ற புலம்பெயர் இலக்கியமானது தனது பரப்பினை அகலித்துச் செல்கின்ற வேளையில் இவை பற்றிய ஆய்வுகளானவை, புலம் பெயர் சூழல் அளித்த வாழ்வியல் அனுபவங்;களையும் அதனால் அடைந்த துன்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள் என்பனவற்றினைப் படைப்புக்களினூடாக வெளிப்படுத்தப்படும் போது எதிர்கால சந்ததியினரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும். முகங்களினூடாகப் புலப்படும் பண்பாட்டுச் சிக்கல்களானவை தமிழ்ப் பண்பாடு பற்றிய மீள் வாசிப்பினையும் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிந்து கொள்ள உதவுவதோடு, தமிழ்ப் பண்பாட்டினை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையினையும் வலியுறுத்தி நிற்கின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/420
ISSN: 22791922
Appears in Collections:Tamil

Files in This Item:
File Description SizeFormat 
JUICE12-TrackF-pg151-152.pdf253.88 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.