Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12860| Title: | கிறிஸ்தவமும் பால்நிலையினரும்: பால்புதுமையினர் (LGBTQIA+) குறித்த ஒரு சிறப்புப் பார்வை |
| Authors: | Thanusha, S. Mary Winifreeda, C. |
| Keywords: | கிறிஸ்தவம்;சமூகம்;பால்நிலை;பால்புதுமையினர்;வரலாறு |
| Issue Date: | 2026 |
| Publisher: | Center for Gender Equity and Equality, University of Jaffna, Sri Lanka |
| Abstract: | மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே சமயம் என்பது தனிமனித ஒழுக்கம், சமூகக் கட்டமைப்பு மற்றும் விழுமியங்களைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாகவும், மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டும் திகழ்ந்துள்ளது. பால், பால்நிலை என்னும் இரு பதங்களில் 'பால்' இயற்கையானதாக அமைகிறது. ஆயினும் 'பால்நிலை' சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் பால்நிலை என்ற கட்டமைப்பிற்குள்ளே ஆண், பெண் மற்றும் பால்புதுமையினர் (LGBTQIA+) என அனைவரும் உள்ளடக்கப்படுகின்றனர். ஆய்வானது பால்நிலை என்ற பிரதான மையப்பொருளில் உள்ளடங்கும் பால்புதுமையினரை முதன்மைப்படுத்துவதாக அமையப் பெற்றுள்ளது. 'பால்புதுமையினர்' எனக் குறிக்கப்படும் பதமானது சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மூலச்சொற்களினால் (umbrella terms) அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆயினும் ஆய்வுகளையும் துறைசார் கற்கை நெறிகளையும் மேற்கொள்ளும் பொழுதும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய சுருக்கக் குறியீட்டுச் சொல்லாக LGBTQIA+ விளங்குகிறது. ஆரம்பம் முதல் இன்று வரை ஆண், பெண் என இரு பால்நிலையினருக்கும் இடையே பல்வேறு ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும், உரிமை மீறல்களும், வன்முறைகளும் காணப்படுகின்ற நிலையில், பால்புதுமையினரின் தோற்றம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமூகம் மனிதனைப் பால்நிலை என்ற அடிப்படையில் பாகுபடுத்தினாலும் ஆண், பெண் ஏற்பு சமூகத்தில் ஓரளவுக்குக் காணப்படுகின்றது. ஆயினும் பால்புதுமையினர் என்ற மனித சமூகத்தைத் தற்கால சமூகம் மற்றும் சமயங்கள் என்பன ஏற்க மறுக்கின்றமைக்கான காரணம் என்னவென்பதே ஆய்விற்கான தேடலாக அமைந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பால்புதுமையினர் குறித்து கிறிஸ்தவம் கொண்டுள்ள கருத்து நிலைகளை அடையாளம் கண்டு, ஒரு வரலாற்றுப் பின்னணியில் எடுத்துரைப்பது ஆய்வின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. கிறிஸ்தவ சமயத்தில் பால்புதுமையினர் குறித்த பலவிதமான நேர் மற்றும் எதிர்மறையான சிந்தனைகள் காணப்படுகின்றன என்னும் கருதுகோள் இங்கு முன்;வைக்கப்படுகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகள் மூல நூலான விவிலியம், தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், திரு அவையின் சுற்றுமடல்கள், சஞ்சிகைகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் சமகால ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து பெறப்படும் தரவுகள் என்பன தொகுக்கப்பட்டு, பெறப்பட்ட கருத்துக்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும். மேலும் ஆரம்பக் காலங்களில் சமயங்களுடன் இணைந்த கலாசாரப் பின்புலங்களில் பால்புதுமையினருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், காலனித்துவக் காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களினால் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளானது என்பதைச் சமகாலப் பின்னணியில் இவ்வாய்வு புலப்படுத்துகின்றது. பெரும்பான்மையான சமயங்களில் அவற்றின் அடிப்படைத் தத்துவங்கள் ஒன்றாயினும் காலப்போக்கில் உருவான சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் ஆணாதிக்கப் பார்வைகள், புனித நூல்களுக்கு வழங்கிய குறுகிய விளக்கங்களே பால்புதுமையினரை விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளன. பால்நிலைப் பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கு சமயங்கள் அதன் புனித நூல்களைச் சமகாலச் சமூகப் பின்னணியில் மறுவாசிப்புச் செய்தல் அவசியம். சமயத்திற்கும் பால்புதுமையினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலமே ஒருங்கிணைந்ததொரு சமுதாயத்தினை உருவாக்க முடியும் என்பதை இந்த ஆய்வானது வலியுறுத்துகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12860 |
| Appears in Collections: | Christian & Islamic Civilization |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| கிறிஸ்தவமும் பால்நிலையினரும் பால்புதுமையினர் (LGBTQIA+) குறித்த ஒரு சிறப்புப் பார்வை.pdf | 261.85 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.