Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12352
Title: சமூகத் தொடர்பாடல் களமாகத் திருமறைக் கலாமன்றம்
Authors: Priyadarshan Kruise, S.
Anutharsi, K.
Keywords: தொடர்பாடல்;சமூகத் தொடர்பாடல்;திருமறைக் கலாமன்றம்;பொதுமக்கள்
Issue Date: 2025
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: திருமறைக் கலாமன்றம் 1960 களில் இருந்து அரங்க இயக்கமாகவும் பண்பாட்டு மையமாகவும் தொழிற்படுவதுடன் ஒரு சமூகத் தொடர்பாடல் நிறுவனமாகவும் விளங்குகின்றது. அத்துடன் சமூக, அரசியல், கல்வி, கலை, இலக்கியம் எனப் பல்வேறுபட்ட பணிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. சமீபகாலமாக மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ளதால் நேரடித் தொடர்பாடலில் பின்னடைவுகள் காணப்படுகின்றன எனவும் தொடர்பாடல் களமாகத் திகழும் நிறுவனங்களோடு இடைத்தொடர்பினைப் பேணும் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் கருத்து நிலவுகின்றது. இந்த ஆய்வானது சமூகத் தொடர்பாடல் களமாகத் திகழும் திருமறைக் கலாமன்றத்தின் வகிபங்கினைக் கண்டறிதலைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் திருமறைக் கலாமன்றத்தின் உருவாக்கம் மற்றும் தற்காலப் போக்கினைப் பற்றியும் திருமறைக் கலாமன்றத்தின் பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது. அதேவேளை, சமூகத் தொடர்பாடலை மேற்கொள்வதற்குத் திருமறைக் கலாமன்றம் பயன்படுத்தும் ஊடகங்கள் மற்றும் உத்திகள் பற்றியும் சமூகத் தொடர்பாடலை மேற்கொள்வதில் திருமறைக் கலாமன்றம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆய்வை முன்னெடுத்துச் செல்கின்றது. இந்த ஆய்வில் முதல் நிலைத்தரவுகளை அவதானிப்பு, வினாக்கொத்து மற்றும் நேர்காணல்களைப் பயன்படுத்தி ஆய்வாளர் திரட்டியுள்ளார். திருமறைக் கலாமன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள், முன்னைய நாள் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 12 பேர் பனிப்பந்து மாதிரித் தெரிவு மூலமாகத் தெரிவுசெய்யப்பட்டதோடு திருமறைக் கலாமன்றத்துடன் தொடர்புபடுகின்ற பெறுநர்களாக 30 பேர் கட்டமைக்கப்பட்ட எழுந்தமான அடிப்படையிலும் மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வில் ஆழமான புரிதலை ஏற்படுத்துவதற்கும் கருத்துருவாக்கத்திற்கும் தெரிவு வெளிப்படுத்தல் கோட்பாடு, பயன்களும் மகிழ்வூட்டலும் கோட்பாடு, மற்றும் நியூகொம் மாதிரி ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட சமூக நிறுவனங்கள் காணப்பட்ட போதிலும் திருமறைக் கலாமன்றமானது இன்று 60 வருடங்களைக் கடந்து மிக நீண்டகால உருவாக்கத்தின் பின்னணியில் கலை, கல்வி, இலக்கியம், சமயம், சமூகம் எனப் பல பரிமாணங்களில் பணிகளையாற்றி வந்திருக்கின்றது. அதேவேளை சமூகத் தொடர்பாடலை மேற்கொள்வதில் திருமறைக் கலாமன்றம் ஏராளமான சவால்களையும் எதிர்கொள்கின்றது. 98% மக்கள் திருமறைக் கலாமன்றத்துடன் தொடர்பினைப் பேண விரும்புகின்றனர். 54% மக்கள் சமய ரீதியான முக்கியமான காலப்பகுதியில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர் என இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய பாஸ்கு நாடகங்கள், திருப்பாடுகளின் காட்சிகள், நாட்டுக் கூத்துக்கள் அரங்கேற்றம் செய்யப்படும் காலப்பகுதியிலேயே அதிகம் தொடர்பினைப் பேணுகின்றனர். பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்தாலும், கலைசார் பணிக்கு அதிகளவான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன் சமயம் கடந்த அமைப்பாகவும் செயற்படுகின்றது. சமூகத்திற்கும் திருமறைக் கலாமன்றத்திற்குமான சமூகத் தொடர்பாடலானது முன்பிருந்ததை விட இன்று குறைந்துவிட்டதுடன் அண்மைக் காலங்களில் இணையவழி மூலமான தொடர்பாடலே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் ஆய்வின்வழி கண்டறியப்பட்டது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12352
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.