Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12284
Title: அரகலய’ காலத்தில் அவந்த ஆர்டிகலவின் கருத்துப்படங்கள்
Authors: Mohanraj, T.
Raguram, S.
Keywords: கருத்துப்படம்;அரகலய போராட்டம்;அங்கதச்சுவை;குறிமுறையவிழ்ப்பு
Issue Date: 2025
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: காலத்துக்குக் காலம் மக்களுக்கு முறையான, பகுத்தறிவைத் தூண்டக்கூடிய தகவல்களைப் பெற்றுத்தரும் ஊடகங்கள் பல இருந்துவருகின்றபோதிலும் அவற்றில் கருத்துப்படங்கள் தனித்துவமான, மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. வார்த்தைக் குவியல்களுக்கு மத்தியில் மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்குப் பதிலாக, சித்திரங்களின் ஊடாக ஓரிரு வார்த்தைகளில் அனைத்து மக்களும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும், அங்கதச் சுவையுடனும் மிக முக்கிய தகவல்களைத் துல்லியமாகவும் கூர்மையாகவும் கொண்டு சேர்க்கும் பணியைக் கருத்துப்படங்கள் மேற்கொள்கின்றன. அந்தவகையில், இந்த ஆய்வானது ‘அரகலய’ காலத்தில் தெற்கின் கருத்துப்பட வரைகலைஞரான அவந்த ஆர்டிகலவின் கருத்துப்படங்கள் பற்றிய ஆழமான பார்வையை மேற்கொள்கிறது. ‘அரகலய’ என்னும் மாபெரும் மக்கள் போராட்டம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தின்போது அவந்த ஆர்டிகலவின் கருத்துப்படங்கள் கலைத்துவமான உந்துசக்தியாகச் செயற்பட்டன. குறித்த ஆய்விற்காக டெய்லி மிரர் (Daily Mirror) பத்திரிகையில் வெளியிடப்பட்ட அவந்த ஆர்டிகலவின் 35 கருத்துப்படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இக்கருத்துப்படங்கள், அரகலய போராட்டச் சூழலோடு நேரடியான மற்றும் மறைமுகமான தொடர்புகளைக் கொண்டுள்ளதை தரவுப் பகுப்பாய்வின் மூலம் கண்டறிய முடிந்தது. ஆர்டிகலவின் கருத்துப்படங்கள் உள்ளடக்கப் பகுப்பாய்வுக்கும் குறிமுறையவிழ்ப்பிற்கும் ஆய்வாளரால் உட்படுத்தப்பட்டன. அரகலய காலப்பகுதியில் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களின்பால் ஆர்டிகலவின் கருத்துப்படங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளதை கண்டறிய முடிகிறது. அவரது கருத்துப்படங்களில் அரசியல் தவறுகள், ஆட்சியின் ஊழல்கள், மக்களின் எதிர்ப்புக்கள் மற்றும் போராட்டகளத்திலிருந்தான மக்களின் உணர்வுகள் என்பன வெளிக்காட்டப்பட்டன. இது, களத்தில் நேரடியாகப் பங்கேற்காத மக்கள் மத்தியிலும் போராட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஆர்டிகலவின் கருத்துப்படங்கள் போராட்டச் சூழல் பற்றிய தெளிவினை ஏற்படுத்தி அரசியல், சமூக, பொருளாதாரரீதியாகக் கருத்துருவாக்கங்களை முன்னெடுத்து போராட்டச் சூழலை வலுப்பெறச் செய்ததோடு, நாட்டில் அரசியல் மாற்றத்தை தோற்றுவிக்கவும் உதவின. அவரின் கருத்துப்படங்களில் ஊடக நிறுவனத்தின் ஆதிக்கம் மற்றும் அரசியல் தலையீடுகள் இன்றி மக்கள் சார்பான கருத்துநிலை நோக்குகளை அவதானிக்க முடிந்தது. கருத்துப்படங்கள் முழுமையாக அனைவராலும் குறிமுறையவிழ்ப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாக அமைவதும், இதற்கு ஒவ்வொருவரதும் அரசியல், சமூக பொருளாதாரம் சார் புரிதல்கள் தாக்கம் செலுத்துவதும் ஆய்வில் அவதானிக்கப்பட்டது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12284
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.