Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12021| Title: | இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது மறை அறிவிப்பில் மனித நேயப் பணிகள் |
| Authors: | Pilendran, G. |
| Keywords: | மனித நேயம்;மறை அறிவிப்பு;மனித மாண்பு;மனித உரிமை;அநீதி |
| Issue Date: | 2018 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | 16 ஆம் நூற்றாண்டின் முற்கூற்றில் இலங்கையில் கத்தோலிக்க மறையை அறிமுகம் செய்த போர்த்துக்கேய மிசனறிமார் தாம் மேற்கொண்ட மறை அறிவிப்பின்போது மனித நேயப் பணிகளைச் சிறந்ததோர் ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் அழுத்தமாக எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். கிறிஸ்துவின் மனித உடல் ஏற்பு, மனித மாண்பின் மேன்மையை உயர்த்தியது. கிறிஸ்து தமது போதனைகளாலும் பணிகளாலும் மனித நேயத்தை மிக உயர்ந்த நிலையில் பேணியதோடு யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதச் செயல்களை வன்மையாகக் கண்டித்து ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகச் செயற்பட்டார். திரு அவையும் வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் மறை அறிவிப்புச் செயற்பாடுகளின்போது, மனித நேயப் பணிகளை மேற்கொண்டதோடு, சமூக அநீதிகளையும் வன்மையாக கண்டித்து எதிர்ப்பையும் முன்வைத்தது. இலங்கையில் கத்தோலிக்க மறையைப் பரப்பிய போர்த்துக்கால் நாட்டு மறை அறிவிப்பாளர்கள் தம் இலக்கை அடைவதற்கு மனித நேயப்பணிகளை ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பதற்கு போர்த்துக்கேயர் காலத்து வரலாறு கூறும் முதன்மை ஆவணங்களிலிருந்தும் துணைமை ஆவணங்களிலிருந்தும் தரவுகள் திரட்டப்பட்டு வரலாற்றியல் ஆய்வுமுறை, அறிவியல்முறை, விவரணமுறை, ஒப்பீட்டுமுறை, பகுப்பாய்வுமுறை என்னும் ஆய்வு முறைமைகள் வழியே முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இனங்காணப்பட்ட முடிவுகள் மனித நேயப் பணிகளாகவும் சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் பணிகளாகவும் விளங்குகின்றன. மனித நேயப்பணிகள் 'Misericordia' 'இரக்கச்செயல்' என்னும் அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டன. இவ் அமைப்பின் சிறப்பான பணிகளாக சிறைப்பட்டோரைத் தரிசித்து ஆறுதல் அளிப்பது, நோயாளரைப் பராமரிப்பது துயர் துடைப்பது, பசித்தோருக்கு உணவளிப்பது, தாகமுற்றோர் தாதகம் தீர்ப்பது, ஆடை இல்லாதோர்க்கு ஆடை வழங்குவது, பயணிகளுக்குத் தங்குமிடம் அளிப்பது, இறந்தோரை அடக்கம் செய்வது என்பன விளங்கின. இயேசு சபையினர் இவ்வாறான பணிகளில் ஏனைய சபையினரை விட அதிகம் ஈடுபாடு காட்டினர். மன்னாரில் இரண்டும், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுல் ஒவ்வொன்றாக வைத்திய சாலைகள் நிறுவப்பட்டு, அவற்றின் நிர்வாகம் மிசனறிமாரிடம் கையளிக்கப்பட்டது. இங்கு இராணுவத்தினருக்கும் சுதேசிகளுக்கும் வைத்தியம் மேற்கொள்ளப்பட்டது. மிசனறிமார் சுதேசிகளுக்கு ஐரோப்பிய மருத்துவ முறைமையை அறிமுகம் செய்ததுடன் சுக வாழ்வு, கொள்ளை நோய்கள், மூடப்பழக்க வழக்கம், பில்லி சூனியம் பற்றிய விழிப்புணர்வையும், இவை பற்றிய அறிவையும் அளித்தனர். பஞ்சம், கொள்யை நோய் காரணமாக மக்கள் வறுமையுற்ற வேளையில் வாழ்வாதார உதவிகளையும் அளித்தனர். கொள்ளை நோயின் போது பாதிக்கப்பட்டோரைத் தவிக்கவிட்டு இனத்தோர் தப்பிச் செல்வது தவறானது என்பது மிசனறிமாரால் சுட்டிக்காட்டப்பட்டது. கொள்ளை நோயின் போதும் பாதுகாப்பான முறையில் நோயாளரைப் பராமரிக்கும் முறையைக் கற்றுக் கொடுத்தனர், சதுப்பு நிலங்களைச் சாகுபடிக்கு ஏற்றவையாக மாற்றிப் பயிச் செய்கை பற்றிய அறிவை வழங்கியதோடு வேலை வாய்ப்பையும் வழங்கினர். மரக்கறிகளும் பழமரங்களும் சாகுபடி செய்யப்பட்டன. இதன் வழி மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. போர்த்துக்கேய அதிகாரிகளும் இராணுவத்தினர்களும் சுதேசிகளுக்கு எதிராகக் குறிப்பாக, முத்துக் குளியலில் அநீதி இழைத்து, அதீத வரி விதித்து கடுமையாக வஞ்சித்த வேளைகளில் மிசனரிமார் மக்கள் சார்பாகச் செயற்பட்டு மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்தனர். மக்களிடம் மனித மாண்பின் மேன்மையை உணர்த்திதோடு, திருமணத்தின் மாண்பையும் கற்பித்தனர். சிறைப்பட்டோர் விசேட கவனிப்புப் பெற்றமைக்கும் வரலாற்றுக் குறிப்புகளுண்டு. தென் இந்தியாவில் வடகரிடமிருந்து கத்தோலிக்கரைப் பாதுகாப்பதற்கு மன்னார்த் தீவிற்கு அவர்களை அழைத்துவந்து பாதுகாப்பு வழங்கிப் பராமரித்தனர். எனவே, இன்றும் திரு அவை மனித நேயச் செயற்பாடுகளுக்கு உரிய இடம் அளிப்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்டுவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவதன் மூலமே மனித நேயப் பண்பாடான சமூகத்தை உருவாக்க முடியும். |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12021 |
| Appears in Collections: | 2018 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது மறை அறிவிப்பில் மனித நேயப் பணிகள்.pdf | 23.05 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.