Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12020| Title: | உள்நாட்டுப் போர்க்காலத்தில் "பாதுகாவலன்" அச்சு ஊடகத்தின் மனிதநேய நெறிசார் பதிவுகள் பற்றிய ஆய்வு |
| Authors: | Anton Stephen, A. |
| Keywords: | பத்திரிகையியல்;தொடர்புச் சாதனங்கள்;பாதுகாவலன்;யாழ்ப்பாண மறைமாவட்டம்;மனிதநேய நெறிசார் பதிவுகள் |
| Issue Date: | 2018 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | 1876 ஆம் ஆண்டு மாசி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'பாதுகாவலன்' பத்திரிகை இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை ஆகும். நீண்டகால சரித்திர பாரம்பரியத்தைக் கொண்ட இப்பத்திரிகை, வரலாற்றில் பல மைல்கற்களை தாண்டி, இலங்கையின் வடபகுதி தமிழ் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்களுக்குமென இதன் சேவைப் பரப்பை விரிவாக்கி இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக உள்நாட்டுப் போர்ச்சூழலில் செய்தித் தணிக்கையிருந்தும் 'மனிதத்துக்கு'க் குரல் கொடுத்து வியத்தகு முறையில் இப்பத்திரிகை ஆற்றிய பணி வரலாற்றில் சிறப்பான இடத்தைப்பிடித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையிலிருந்து வெளியேறியபின், பல்லின, பல்சமய மக்கள் வாழும் இத்தீவில் குழப்பங்களும் இன முரண்பாடுகளும் ஏற்பட்டன. இன, மத அடையாளங்களை முதன்மைப்படுத்தி பெரும்பான்மை இன மக்கள் சிறுபான்மை மக்களை அரசியல் ரீதியாகவும், கல்விசார் ரீதியாகவும் பாரபட்சம் காட்டி தனிமைப்படுத்திய சூழல் உருவான போது இன முரண்பாடுகள் கலவரங்களாகவும் உள்நாட்டுப் போராகவும் வலுப்பெற்றது. இதன் விளைவாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்துவந்த சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக உள்நாட்டுப்போர் வலுப்பெற்று உக்கிரமடைந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இறுக்கமான பொருளாதாரத் தடை, ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கட்டாய வெளியேற்றம், கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுக்கள், நில ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, கொலைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இடம்பெற்ற பாரியளவிலான கைதுகள், காலவரையறையின்றிய தடுத்துவைப்புக்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல்கள், சொத்தழிப்புக்கள் போன்றவற்றால் பெரும் மனிதப்பேரவலம் நிகழ்ந்தது. இவ் வரலாற்றுப் பின்புலத்தில் மனிதப்பேரவலத்தால் பாதிப்புக்குள்ளான மக்களை வலுப்படுத்தியும், வழிநடத்தியும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க உரிய சூழலை உருவாக்கி, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த இலங்கைக்குள்ளும், வெளியிலும் பலர் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். இம்முயற்சிகளில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் காத்திரமானவை என்பது பலரது கருத்து. இவ்வகையில் கத்தோலிக்கத் திருச்சபையின் இப்பணியில் யாழ்ப்பாண மறைமாவட்ட அச்சு ஊடகமான 'பாதுகாவலன்' பத்திரிகை, மனிதநேய நெறிசார் பதிவுகளை மேற்கொண்டு பணியாற்றியுள்ளமை இக்கால வெளியீடுகளில் புலனாகின்றது. குறிப்பிட்ட இக்காலப்பகுதியில் 'பாதுகாவலன்' பத்திரிகை வெளியீடுகள் உள்ளடக்கியுள்ள ஆசிரியர் தலையங்கங்கள், பிரதான செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் போன்ற ஏனைய ஆக்கங்களை வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்து சமகால வரலாற்று நிகழ்வுகளோடு ஓப்பீடு செய்து ஆராய்வதனூடாக இக்கூற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும், உக்கிரமான போர் நடைபெறும் வன்னி பெருநிலப்பரப்பில் சிக்குண்ட மக்களின் மனித மாண்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியதோடு மனித மாண்பை சிதைக்கும் அரசின் கொடூரமான செயற்பாடுகளுக்கெதிரான கண்டனங்களையும், ஆசிரியர் தலையங்கங்கள். பிரதான செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் போன்ற வடிவங்களில் இப் பத்திரிகை தொடர்ச்சியாக பதிவுசெய்தும் உள்ளது. இப்பதிவுகள் மனித பேரவலத்தை வெளிக்கொணர்வதாக மட்டுமல்லாமல், பேரவலத்திற்குள் வாழ்ந்த மக்களுக்கான உதவிகளை, போர் பிரதேசத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கான புறச்சூழலை ஏற்படுத்தி கொடுப்பவையாகவும், மக்களின் அவல நிலையை நீக்கி அவர்களின் உரிமைக்காக குரல்கொடுப்பவர்களின் செயற்பாடுகளுக்கு மேலும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளமையும் இங்கு தெட்டத்தெளிவாக புலனாகுகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12020 |
| Appears in Collections: | 2018 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| உள்நாட்டுப் போர்க்காலத்தில் பாதுகாவலன் அச்சு ஊடகத்தின் மனிதநேய நெறிசார் பதிவுகள்.pdf | 23.05 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.