Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12017| Title: | திருமறைக் காலாமன்றத்தின் அமைதிற்கான அரங்க ஆற்றுகைகள் பற்றி ஓர் ஆய்வு |
| Authors: | Yasrin Jeloot, B. |
| Keywords: | அமைதி;சமூக நல்லுறவு;நல்லிணக்கம்;அரங்க ஆற்றுகை;திருமறைக் கலாமன்றம் |
| Issue Date: | 2018 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | சமகால சமுதாயம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொழி, இனம், மதம் சார் மோதல்களால் தாக்கத்திற்குள்ளாகி வன்முறை, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு போன்ற பலவற்றாலும் கட்டுப்பட்டு 'மனிதநேய நல்லுறவு' என்ற அடித்தளத்தை விட்டு விலகிச்செல்கின்றதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. இத்தகைய பின்னணியில், சமூகம், நாடு. உலகம் என்ற வகையில் நல்லுறவினைப் பேணுவதற்காக ஐக்கியநாடுகள் சபை, ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, அகில உலக மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில், தேசிய மன்னிப்புச்சபை, தேசிய மனித உரிமைகள் தேசிய சிறுவர் பாதுகாப்புச்சபை, தேசிய நீதிமன்றங்கள், தேசிய பாதுகாப்பு சபை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு போன்றவை நடைமுறையில் இருக்கின்றன. மேலும் சமூக மட்டத்தில், மதநிறுவனங்கள், கல்விக்கூடங்கள், அறநெறி மையங்கள், மனிதர்களை நல்வழிப்படுத்தும் பிற சமூக அமைப்புக்கள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றன. இருந்தபோதும், நமது சமூகத்தை ஒரு நிலையான கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முடியவில்லையே என்ற வினா எழுவது இயல்பு. இத்தகைய சூழ்நிலையில், மனிதநேயச் சிந்தனைகளை கலைகள் மூலமாக சமூகத்திற்கு வழங்கி ஒவ்வொருவர் மனதிலும் அமைதியை நிலைநாட்டி அதன் மூலம் தேசிய (உலக) சமாதானத்திற்கு வலுவூட்டும் குறிக்கோளை கொண்டு செயற்பட்டு வரும் ஒரு கலைபண்பாட்டு நிறுவனமாக திருமறைக் கலாமன்றத்தை அடையாளம் காணமுடிகின்றது. 1965 களில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீ. மரியசேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட இக் கலை நிறுவனம் "கலை வழி ஊடாக மனிதத்தை மேம்படுத்தல்" என்ற விரிந்த சிந்தனை நோக்குடன் இயங்கி கலைச்செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது. கலைப் படைப்புக்கள் மக்கள் மனத்தில் பல்வேறு தாக்கவன்மையை ஏற்படுத்தக் கூடியவை. நாட்டில் கடந்த பல காலங்களாக நிலவிவந்த இன முரண்பாடுகளால் மக்களிடத்தில் பயம், அவலம், விரக்தி, குரோதம், பிரிவினை மற்றும் புரிந்துணர்வின்மையும் நிலை கொண்டிருந்த பின்னணியில் திருமறைக் கலாமன்றத்தின் கலைப்படைப்புக்கள் மக்கள் மனங்களில் ஆற்றுப்படுத்தலை செய்துவந்துள்ளன. 1980களின் பின் இனமுரண்பாடுகள் அதிகரித்து கடுமையான யுத்தம் இடம் பெற்ற காலத்தில், நாட்டின் அமைதி பற்றிச் சிந்திக்கும் வகையில் அரங்கப்படைப்புகள் திட்டமிடப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. இலங்கையின் தலைநகரம் முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு ஆற்றுகைகள் இம் மன்றத்தால் நிகழ்த்தப்பட்டன. சாதாரண மக்கள், அரசியல் தலைமைகள் முதல் சர்வதேசம் வரை அரங்க ஆற்றுகைகளின் ஊடாக நாட்டில் அமைதிநிலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து அவ்வப்போது எடுத்துரைக்கப்பட்டன. போர் முடுக்கிவிடப்பட்டிருந்த காலத்தில் சிறுபான்மை இன அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், காணாமல் போதல் போன்ற மனிதப் பேரவலங்கள் மத்தியில் "யுத்தம் வேண்டாம் - அமைதி வேண்டும்" எனும் தொனிப்பொருளிலும், நாட்டில் ஆயுதப்போர் நிறைவுபெற்றதன் பின்னர், பாரபட்சம், பாராமுகம், அத்துமீறல், மரபுரிமைகளை மதியாமை, சுய அடையாளங்களுடன் கூடிய வாழ்வுரிமை மறுக்கப்படல், கலாச்சார ஒழுக்கப்பிறழ்வு போன்றவை மக்கள் வாழ்வியலில் நிலைகொண்டிருந்த போது "மீள் இணக்கப்பாடு - நிரந்தர அமைதி" என்ற மையப்பொருளை அடிப்படையாகக் கொண்டும் அரங்க ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கற்பனை, வரலாறு, சமகால வாழ்வு அனுபவம், விஞ்ஞானம், ஆன்மீகம் போன்றவற்றினூடாக நாடகத்திற்கான கதை அம்சங்கள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருமறைக் கலாமன்றத்தின் தோற்றப்பின்னணி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்நிறுவனம் எத்தகைய அரங்க ஆற்றுகையினை நிகழ்த்தியது. அவற்றின் உருவ உள்ளடக்கம் எத்தகையது, ஆற்றுகையில் ஈடுபட்டவர்கள் யாவர், ஆற்றுகை செய்யப்பட்ட இடங்கள், அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், எதிர்கால பல்கலாசார சமூக மக்களின் அமைதிக்கான சூழ்நிலைக்கு அரங்கச் செயற்பாடுகளால் ஆற்றக்கூடிய நன்மைகள் யாவை என்ற பல வினாக்களை உள்ளடக்கியதாக இவ் ஆய்வு அமையப்பெறுகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12017 |
| Appears in Collections: | 2018 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| திருமறைக் காலாமன்றத்தின் அமைதிற்கான அரங்க ஆற்றுகைகள் பற்றி ஓர் ஆய்வு.pdf | 23.05 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.