Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12016
Title: புனித யாகப்பர் அம்மானையை முன்நிறுத்தி தமிழ் கிறிஸ்தவ அம்மானைகளில் கிறிஸ்தவ மனிதநேயப்பண்பாடு
Authors: Ranganayakam, T.R.
Keywords: அம்மானை;சமயம்;சமூகம்;ஊடகம்;மறைக்கல்வி;மனிதநேயம்
Issue Date: 2018
Publisher: University of jaffna
Abstract: கிறிஸ்தவம் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அறிமுகமான காலத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும், அடிமைத்தனங்களும் நிலவின. உயர் சமூகமாகத் தம்மைக் கருதியோர் தாழ்ந்த சமூகத்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதிப் புறக்கணித்தனர். இந்நிலையில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மன்னிப்பு, ஒற்றுமை போன்ற கிறிஸ்தவ விழுமியங்களை தமது போதனைகளில் முன்வைத்து, அனைவரோடும் சமமாகப்பழகி, மனிதநேயச் செயல்களில் ஈடுபட்டு புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டைத் தோற்றுவிக்க முன்னின்று உழைத்தனர். மறைபரப்பாளர்களின் இம்முயற்சிக்கு தமிழ்க்கிறிஸ்தவ அம்மானைகள் பெரும்பங்களிப்பை வழங்கியுள்ளன. அம்மானை என்பது மகளிர் விளையாட்டில் பிறந்தது. மூன்று பெண்கள் சிறிய பந்து போன்ற அம்மானைக் காய்களை மேலே எறிந்தும், ஏந்தியும், மீண்டும் மாறிமாறி எறிந்தும், ஏந்தியும் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர். அவ்வாறு ஆடிப்பாடும் போது ஒருவரை ஒருவர் விழித்து அம்மானை எனக்கூறி முடிப்பர். இதனால் இப்பாடல் அம்மானைப்பாடல் எனவும், இவ்வேளையில் ஆடப்படும் ஆட்டம் அம்மானை ஆட்டம் எனவும் அழைக்கப்பட்டது. இவ்விதம் நாட்டுப்புற மக்களின் வாய்மொழிச் செல்வமாக வளம்பெற்ற அம்மானைப் பாடல்கள் தொடக்கத்தில் மன்னர்கள் புகழ்பாடுபவையாகவும் காலப்போக்கில் இந்துசமயக் கடவுளர்களையும், அடியார்களையும் பற்றி எடுத்துரைக்கும் இலக்கியங்களாகவும் அமைந்தன. கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பரப்பும் நோக்கோடு தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களுக்கு வந்த மறைபரப்பாளர்கள் தமிழ்பேசும் மக்கள்மத்தியில் அம்மானை இலக்கியங்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பதை அவதானித்ததோடு, அவற்றின் மூலம் கத்தோலிக்க மறைக்கருத்துக்களை எடுத்துரைக்கும் போது அவை மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பதை நன்குணர்ந்து கொண்டனர். எனவே அம்மானை இலக்கியங்களை இயற்றக்கூடிய கிறிஸ்தவ புலவர்களின் உதவியைப் பெற்று பல தமிழ்க்கிறிஸ்தவ அம்மானைகளை இயற்றுவித்தனர். தமிழில் முதன்முதலில் தோன்றிய கிறிஸ்தவ அம்மானை அலசு அம்மானையாகும். இது பதினாறாம் நூற்றாண்டில் தோன்றியது. இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் எண்பத்து மூன்று கிறிஸ்தவ அம்மானைகள் தோன்றியுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டாக அதிரியார் அம்மானை, புனித யாகப்பர் (சந்தியாகுமாயோர்) அம்மானை, தொம்மை அப்போஸ்தலர் அம்மானை, சந்தந்தோனியார் அம்மானை, அகினேசக் கன்னி அம்மானை, கித்தேரியம்மாள் அம்மானை, தேவசகாயம் பிள்ளை அம்மானை, அர்ச். அருளானந்தர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, வேதப்பொருள் அம்மானை, புனித இசிதோர் அம்மானை, சஞ்சுவாம் அம்மானை, புனித ஆசீர்வாதப்பர் அம்மானை, மடுமாதா அம்மானை, யோசேவ் வாஸ் முனிவர் அம்மானை போன்ற ஒருசிலவற்றைக் குறிப்பிடலாம். இவ்வம்மானைகள் அனைத்திலும் கிறிஸ்தவ மனிதநேய கருத்துக்கள் இயேசுவின் போதனைகளாகவும் புனிதர்களின் வாழ்க்கையின் மூலமான படிப்பினைகளுாடாகவும் வெளிப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. இவ்வம்மானைகள் பன்படுத்தப்படும் போது மக்களின் ஆழ்மனதில் அவர்களை அறியாமலேயே புகுந்து அவர்களுடைய வாழ்க்கையை நெறிப்படுத்த வல்லவையாக இவை அமைந்திருக்கின்றன. புனித யாகப்பர் அம்மானை பேதுருப்புலவரால் 1647ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கிளாலியில் அமைந்த புனித யாகப்பரின் ஆலயத்திற்கு விழாக்கொண்டாட வந்த மீனவசமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு புனிதரின் வரலாற்றையும் கத்தோலிக்க மறைக்கருத்துக்களையும் எடுத்துரைக்கும் நோக்குடன் இயற்றப்பட்டது. அக்காலத்தில் மீனவர்கள் தீட்டுடையவர்களாகக் கருதப்பட்டு சமூக-சமய நிலையில் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களை கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் சமமாகக்கருதி மனிதநேயத்துடன் நடத்தினர். இவ்விதம் புதிய கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை தோற்றுவித்தவிதம் பற்றிய பல குறிப்புக்கள் புனித யாகப்பர் அம்மானையில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஆய்வில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்குத் தேவையான தகவல்கள் அம்மானை தொடர்பாக வெளிவந்த நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டுள்ளதோடு அவை தொகுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு விபரண முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ள முனைவோருக்கு இவ்வாய்வு துணைபுரியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12016
Appears in Collections:2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.