Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11948
Title: சைவசமயத்தைத் தழைத்தோங்கச் செய்ததில் திருஞானசம்பந்தரின் பங்களிப்பு
Authors: Jeyandran, R.
Keywords: வாதப்பிரதிவாதம்;சீர்திருத்தம்;மக்கள்சேவை;புறச்சமயக் கண்டனம்;மக்கள் மயமாதல்
Issue Date: 2024
Publisher: University of jaffna
Abstract: 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களால் சைவம் தன்னிலை குன்றிப் போனது. இவ்வேளைகளில் சைவத்தை நிலைபெறச் செய்ய அவதரித்தவர் திருஞானசம்பந்தராவர். இதனால் இவர் பரசமயக்கோளரி எனும் பெயரில் அழைக்கப்பட்டார். ‘அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி’ எனும் கருத்துக்கமைய தமிழ் நாட்டில் சமண, பௌத்த மதங்கள் அரச மதங்களாகச் செல்வாக்குப் பெற்றன. இச்சமயங்கள் தவிர்ந்த ஏனைய சமயங்களைப் பின்பற்றும் உரிமை பறிக்கப்பட்டது. சைவசமயத்தைப் பின்பற்றுவர்கள் திருநீறு அணிந்து வருவதைக்கண்டால் கண்டு முட்டு என்றும் அவ்வாறு அணிந்து வருவதை ஒருவர் சொல்லிக் கேட்டால் கேட்டு முட்டு எனும் கீழ்நிலைக்குச் சைவம் புறந்தள்ளப்பட்டது. பாண்டியன் சைவத்தில் இருந்து சமணஞ் சார்ந்தமையால் பாண்டிமாதேவியான மங்கையர்கரசியார் மார்பில் தரிக்கும் மாங்கல்யத்துடன் திருநீறினை மறைத்துப் பூசினார். சைவாலயங்கள், சைவமடங்கள் அழிக்கப்பட்டன. அவை இருந்த இடத்தில் சமண, பௌத்தப் பள்ளிகள் கட்டப்பட்டன. சைவத்தில் இருந்தோர் பலர் பிறசமங்களுக்கு மதமாற்றப்பட்டனர். அவ்வாறு மதமாறியவரில் திருநாவுக்கரசு நாயனாரும் ஒருவர். அவர் மீண்டும் சைவத்தைச் சார்ந்தபோது சமணர்கள் பல்லவ மன்னனுடன் இணைந்து பல இன்னல்களை விளைவித்தனர். அவற்றில் இருந்து இறையருளால் மீண்டார். ஆனால் திருஞானசம்பந்தர் அவதாரம் சைவத்தை நிலைபெறச் செய்ய அமைந்தது என்பதை, ‘வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விழங்க’ எனச் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார். தமிழ் ஆழுமையின் அடையாளமாக ஆழுடைபிள்ளை திகழ்ந்தார். தலைவனுக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிப்பாடும் அவரிடம் காணப்பட்டது. சைவத்துக்கு புறச்சமயங்களால் ஏற்பட்ட இடையூறுகளைக் களைந்ததுபோல உட்சமய சாதி சம்பிரதாயங்களையும் மாற்றி அமைத்தார். தாழ்ந்த குலத்தவரான திருநீலகண்ட யாழ்பாணருக்கு உயர்ந்த இடம் தந்தார். சைவத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தார். அற்புதங்களைச் செய்து மக்களைத் தம்வசப்படுத்தினார். படிக்காசு பெற்று மக்கள் பஞ்சத்தைப் போக்கினார். சமய வாதப் பிரதிவாதமூலம் சைவத்தைக் காத்தார். திருநீற்று நெறிமூலம் சமணத்தை வெற்றிகொண்டு சைவத்தை நிலை நிறுத்தினார். இவ்வாய்வானது தத்துவம் மற்றும் அறிவியல் நோக்கில் வரலாறு, விளக்கமுறை, மற்றும் விபரண ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகின்றது. சவால் மிக்க காலகட்டத்தில் சைவத்தைத் தர்க்காத்துக்கொள்ள திருஞானசம்பந்தர்; கையாண்ட உத்திகள் எக்காலத்துக்கும் பொருத்தமுடையதா? என்பதை ஆய்வுப் பிரச்சனையாகக் கொண்டு ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. ஆய்வுக் கருதுகோளாக ‘சவால் மிக்க காலங்களில் தம்மைத் தற்காத்துக் கொள்ள வாதப்பிரதிவாதங்கள் மற்றும் அற்புதங்கள் மூலம் மக்களையும், ஆட்சியாளர்களையும் தம்சப்படுத்துவதன் மூலம் நெருக்கடிமிக்க காலத்தை வெற்றி கொள்வர்’ என்பது ஆய்வின் கருதுகோளாகக் கொள்ளப்படுகின்றது. பெரியபுராணம் அக்கால அரசியல் சூழலினைத் தெளிவாகக் காட்டுவதால் இவ்வாய்விற்கு முதல்நிலை ஆதாரமாகவும் 7-ஆம் நூற்றாண்டில் தமிழக அரசியல் சூழல், இலக்கிய வளர்ச்சிப் போக்கு என்பன தொடர்பாகவும் அக்காலத்தில் சமயங்களிடையே காணப்பட்ட பூசல்கள் தொடர்பிலும் வரலாற்று ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. அவை இவ்வாய்வுக்கு இரண்டாம் நிலைத் தரவாகவும் அமைகின்றன. ஒரு இனத்துக்கு ஏற்படுகின்ற நெருக்கடி அகச் சமயம் சார்ந்தோ, புறச்சமயம் சார்ந்தோ, அரசியல் வகைப்பட்டோ அல்லது வேறுபல காரணங்களாலோ இடம்பெறலாம். சமயப் பொறையுடமை எனும் நோக்கில் ஒரு சமயத்தின் பெயரால் பிறிதொரு சமயத்தின் சுதந்திரம் பறிக்கப்படுகின்ற போது அச்சமயம் தம்மைத் தற்காத்துக்கொள்ள முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. அத்தகைய ஒருசூழல் சைவத்திற்கு சமண சமயத்தால் ஏற்பட்டபோது திருஞானசம்பந்தர் சைவத்தைக் காத்து அதனை நிலைபெறச் செய்தமை இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11948
Appears in Collections:2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.