Faculty of Siddha Medicine
யாழ்ப்பாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களின் தலவிருட்சங்களும் அவற்றின் சித்தமருத்துவ முக்கியத்துவமும்
Rishikanthi, P.; Subaskar, M.; Arivazhagan, N.; Viviyan, S.
ஈழத்துத் தமிழ் பண்பாட்டுப் பின்புலத்தில், குறிப்பாக சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாண மண்ணில், சமயம் என்பது வெறும் வழிபாட்டு முறையாக மட்டுமன்றி, ஒரு முழுமையான வாழ்வியல் அறமாகவே போற்றப்படுகிறது. இந்த வாழ்வியலில் சித்த மருத்துவம் என்பது பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பதற்கமைய ஆன்மிக மேன்மைக்கு உடல் ஆரோக்கியம் அவசியம் என்பதை உணர்ந்த எம் முன்னோர்கள், ஆலய வழிபாட்டு முறைகளினூடாகச் சித்த மருத்துவக் கோட்பாடுகளைப் பொதிந்து வைத்துள்ளனர். இந்து ஆலயக் கட்டடக்கலை மற்றும் வழிபாட்டு மரபுகளில் 'தலவிருட்சம்' என்பது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித அங்கமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு தனித்துவமான மரத்தை வழிபாட்டிற்குரியதாகக் கொண்டுள்ளன. 'இயற்கையே இறைவன்' எனும் உயரிய தத்துவத்தைப் பறைசாற்றும் இத்தலவிருட்சங்கள், சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தேவையான மூலிகைப் பாதுகாப்பிலும் மனித ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் எத்தகைய அறிவியல் ரீதியான தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை இவ்வாய்வு விளக்குகின்றது. யாழ்ப்பாணத்தின் முக்கிய இந்து ஆலயங்களில் உள்ள தலவிருட்சங்களை இனங்காண்பதும், அவற்றின் தாவரவியற் பண்புகள் மற்றும் சித்த மருத்துவக் குணங்களை ஆய்வு செய்வதும் இதன் முதன்மை நோக்கமாகும். மேலும், ஆலயச் சூழலில் இத்தாவரங்கள் எவ்வாறு ஒரு நுண்-மருத்துவக் காப்பகமாகத் தொழிற்படுகின்றன என்பதை மருத்துவ ரீதியாக நிறுவுவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது விளக்கமுறை ஆய்வு முறையியல் மற்றும் கள ஆய்வு ஆகியவற்றைப் பின்பற்றுகின்றது. யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய இந்து ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், செல்வச்சந்நிதி முருகன் கோவில், வல்லிபுரம் ஆழ்வார் கோவில், கீரிமலை நகுலேஸ்வரர் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில், மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயில் தலவிருட்சங்களாக முறையே வன்னிமரம், வேம்பு, அரசமரம், இலுப்பை, மாமரம், அரசமரம், மருதமரம், வில்வம், வேம்பு போன்றன காணப்படுகின்றன. தரவுகள் ஆலய வரலாற்றுச் சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும் 'பதார்த்தகுண சிந்தாமணி' மற்றும் 'குணவாகடம்' போன்ற சித்த மருத்துவ மூல நூல்களுடன் ஒப்பிடப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்து ஆலயங்களில் காணப்படும் வில்வம்,வேம்பு, வன்னி, நெல்லி, ஆலமரம், மருதமரம், அரசமரம், வன்னி, இலுப்பை போன்ற தலவிருட்சங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ முக்கியத்துவமுடைய பண்புகளைக் கொண்ட மூலிகைகளாக காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது. உதாரணமாக வேம்பு கிருமிநாசினியாகவும் தோல் நோய்களுக்கும் பல் நோய்க்கும் பயன்படுத்துவதுடன், நெல்லி உடல்தேற்றியாகவும் காயகற்ப மூலிகையாகவும் வில்வம் நீரிழிவு மற்றும் வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகளுக்கும் மாமரம், அரசமரம் போன்றன வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.மருத மரத்தின் வேர்கள் மண்ணின் நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்தி நிலத்தடி நீரின் மலினங்களை அகற்றி தூய்மைப்படுத்துகிறது. ஆலயங்களைச் சூழவுள்ள இத்தாவரங்கள் சூழலில் காணப்படும் அசுத்த மாசுக்களையும் வளியில் காணப்படும் நச்சு இரசாயனப்பதார்த்தங்களை அகற்றி வளியைச் சுத்தமாக்குவதுடன் ஒட்சிசன் அளவை அதிகரிகத்து வளிமண்டலத்தைச் சுத்திகரிப்பதுடன், அப்பகுதி மக்களின் உடனடி மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம், இந்து சமய வாழ்வியலில் பொதிந்துள்ள மருத்துவ அறிவியலை வெளிக்கொணர முடிவதுடன், இத்தலவிருட்சங்களைப் பாதுகாப்பதன் ஊடாக வருங்காலச் சந்ததியினருக்கு சிறந்த மூலிகைகளையும் அதன் மருத்துவ பாரம்பரியத்தையும் வழங்க முடியும் என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.
ஆடி அமாவாசை விரதத்தில் காற்றோட்டி மூலிகைப்பயன்பாட்டின் பாரம்பரிய மற்றும் மருத்துவ முக்கியத்துவம்
Subaskar, M.; Arivazhagan, N.; Rishikanthi, P.; Viviyan, S.
இந்து சமய வாழ்வியலில் திதிகள் மற்றும் விரத நாட்கள் வெறும் சடங்கு மரபுகளாக மட்டுமன்றி, மனித உடலியல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையுடன் இணைந்த அறிவியல் அடிப்படையைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி அமாவாசை, ஆன்மிக முக்கியத்துவத்துடன் மட்டுமன்றி பருவகால உடல் சமநிலையைப் பேணும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகவும் விளங்குகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு பிதிர்க்கடன் நிறைவு செய்தபின் உட்கொள்ளப்படும் உணவுகளில் காற்றோட்டி (ஊயிpயசளை ணநலடயniஉய) இளங்காய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முதுவேனில் காலத்தின் உச்சத்தில் காணப்படும் அதிக வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மனித உடலில் வாதக் குறைபாடுகள், செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல் சோர்வு போன்ற நிலைகளை அதிகரிக்கக்கூடும். சித்த மருத்துவக் கோட்பாடுகளின்படி இக்காலத்தில் வாதம் தன்னிலை வளர்ச்சியடைந்து வாதத்தின் குணங்களான உடல் நோதல் குத்தல், குடைதல் பிளத்தல், நரம்பு குன்றல், வறட்சி, நீர்வேட்கை வேதனை போன்றன ஏற்படும். இத்தகைய சூழலில் வாதத்தை சமநிலைப்படுத்தும் உணவுகள் அவசியமாகின்றன. காற்றோட்டி (காற்று ூ ஓட்டி) இளங்காய் அதன் கசப்புச் சுவை மற்றும் செயற்பாட்டு உயிர்வேதியியல் சேர்மங்களின் மூலம் வாதநாசினி தன்மைகளை வெளிப்படுத்துகிறது. வேதியியல் பகுப்பாய்வுகளின்படி இத்தாவரத்தில் சப்போனின், கிளைகோகேப்பரின், பீட்டா- கரோட்டின், சிரிஞ்சிக் அமிலம், வானிலிக் அமிலம், ஃபெரூலிக் அமிலம் மற்றும் பல உயிர்ச் செயற்பாட்டுச் சேர்மங்கள் காணப்படுகின்றன. மேலும் இது புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்து மூலமாகும். மருந்தியல் ரீதியாக இது செரிமான ஊக்கி (ளுவழஅயஉhiஉ), நரம்பு அமைதி அளிப்பி (ளுநனயவiஎந) மற்றும் பித்தப்பைச் சுரப்பைத் தூண்டும் (ஊhழடயபழபரந) தன்மைகளைக் கொண்டதாக அறியப்படுகிறது. மேலும், இத்தகைய பாரம்பரிய உணவுப் பயன்பாடுகள் தலைமுறைதோறும் வாய்மொழி மற்றும் நடைமுறை அறிவாகக் கடத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களில் பயன்படுத்தப்படும் பருவகால உணவுகள், அந்தந்தக் காலநிலைக்கு ஏற்ப உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காற்றோட்டி இளங்காயின் பயன்பாடு, உள்ளூர் தாவர அறிவும் சமூகப் பண்பாடும் இணைந்து உருவாக்கிய ஒரு நிலையான ஆரோக்கிய நடைமுறையாகும். இவ்வாய்வு. இத்தகைய பாரம்பரிய அறிவியல் அமைப்புகளை தாவரவியல் மற்றும் ஊட்டச்சத்து அறிவியலுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த ஆய்வு இலக்கிய அடிப்படையிலான பகுப்பாய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவாக, ஆடி அமாவாசை விரதத்தில் காற்றோட்டி இளங்காயின் பயன்பாடு வெறும் சடங்கு சார்ந்த நடைமுறை அல்லாது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் சமநிலைக் குலைவுகளைச் சரிசெய்யும் அறிவியல் மற்றும் இனத் தாவரவியல் அடிப்படையைக் கொண்ட ஒரு பாரம்பரிய உணவியல் மருத்துவ நடைமுறை என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இலங்கை இந்து மரபில் காணப்படும் உணவுப் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு அறிவும் சுகாதார அறிவியலும் இணைந்த ஒரு முழுமையான பாரம்பரிய மருத்துவ அமைப்பாக விளங்குகின்றன என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
முன்பனி காலத்தின் விரதங்களின் சித்தமருத்துவ முக்கியத்துவம்
Charuja, N.; Karunya, S.; Sivagajendran, S.; Sathiyaseelan, V.
உற்பத்தி, விரும்பியவற்றைப் பெறலாம் எனும் ஆன்மிக் நோக்கங்களைத் தாண்டி மருத்துவ ரீதியாகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் பகலின் தன்மை குறைவாகவும், நீண்ட இராப்பொழுதையும் குளிர்மையின் தாக்கம், சந்திரனின் ஆதிக்கம் போன்றவற்றினால் உடலில் கூதிர் காலத்தில் விருத்தியடைந்திருந்த பித்தம் தன்னிலை அடையும். அதேவேளை கபம் தனது விருத்தியை ஆரம்பிக்கும். இதனால் உடலில் கப நோய்களும், பித்த நோய்களும் அதிகமாக வரும். அதேவேளை முன்பனியினாலும், குளிர்ச்சியினாலும் பசித்தீ அதிகரிக்கிறது. உடலில் குளிர்மை மாறி உஷ்ணத்தன்மையும் கூடும். அதனால் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் மாறுதல்கள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கவே நமது முன்னோர்கள் இக்காலத்தில் விரதங்களைக் கைக்கொள்ளத் தூண்டி அதிகாலையில் எழுந்து, ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள வழிசமைத்தனர். ஆலயங்களில் காலையில் வழங்கப்படும் வில்வம். துளசி தீர்த்தத்தைப் பருகுவதன் மூலம் அதிகரித்த பசித்தீயைக் குறைக்கவும், உடலைக் குளிர்மையடையச் செய்யவும் முடிகிறது. அதுமட்டுமல்லாது விடியற் காலையில் பசித்தீ அதிகமாக இருப்பதனால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகி உடற்றீயை மிகுதிப்படுத்துவதுடன், தேகவன்மையும் அதிகப்படும். சரியான உணவுகளைச் சரியான வேளையில் உட்கொள்ளாது விடின் உடல் தாதுக்கள் நலிவடைந்து உடல் இளைக்கும். இதனைத் தவிர்ப்பதற்காக ஆலயங்களில் காலையில் பிரசாதமாக இனிப்பு,புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவுகளான சர்க்கரைப் பொங்கல், புளிச்சாதம், தயிர்ச்சாதம், மோதகம், உழுத்தங்களி, பஞ்சாமிர்தம் என்பன வழங்கப்படுகின்றன. இக்காலத்தில்பெய்யும்மழைநீர்சுத்தமானதாகவும், அதிக பிராணசக்தியுடையதாகவும், சாத்வீக குணமுள்ளதாகவும் இருக்கும். இதனைச் சேகரித்துப் பருகுவதால் உடலில் குளிர்ச்சியும், நல்ல அறிவுத் தெளிவும், சுக்கில சுரோணித விருத்தியும் உண்டாகும். மேலும் பனிநீரையும் சேகரித்து வடிகட்டி சூரியோதயத்துக்கு முன் பருகி வருவதன் மூலம் சொறி, சிரங்கு, குட்டம், உடல் எரிச்சல், இளைப்பு, வாதநோய்கள் தீரும். விரதங்கள் வெறுமனே ஆன்மிக நோக்கத்திற்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்றது என்பது புலனாகிறது.
மருத்துநீரின் சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவம்
Karunya, S.; Charuja, N.; Sivagajendran, S.; Sathiyaseelan, V.
தமிழ் மக்கள் இயற்கையைக் கடவுளாகப் போற்றி மதித்ததன் காரணமாக பருவ நிலை மாற்றத்திற்கேற்ப கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகிறது. மக்களின் தன்மைகள் நிலத்தை அனுசரித்து மாறுபடுதலன்றி பொழுதிற்கு ஏற்றவாறும் மாறுபாடு அடைகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு 12 திங்கள் அதாவது ஓர் ஆண்டு ஆகின்றது. இதனைப் பெரும் பொழுது என்பர். இது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என 6 பகுதிகளைக் கொண்டுள்ளது. இளவேனில் காலத்தின் (சித்திரை, வைகாசி) தொடக்க நாளாகிய சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலம் சித்திரை வருடப்பிறப்பாகும். இந்நன்னாளில் வருடம் பிறக்கும் விஷ_ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாகத் தலையிலே மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடையணிந்து இறைவழிபாடாற்றி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, கைவிசேடம் பரிமாறி, அறுசுவை உணவு உண்டு பாரம்பரிய விளையாட்டுக்ளில் ஈடுபட்டு பண்டிகையைச்சிறப்பாகத் தமிழ்மக்கள்கொண்டாடுவார்கள். இவ்வாய்வின் நோக்கம் மருத்துநீரினை இப்பண்டிகைக் காலத்தில் பயன்படுத்துவதில் உள்ள சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தை ஆராய்வதாகும். இவ்வாய்வு இலக்கிய விளக்கவியல் ஆய்வு முறையியலில் மேற்கொள்ளப்பட்டதுடன் தரவுகள் சித்தமருத்து நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டன. மருத்துநீர் என்பது எமது முன்னோர்களால் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும், தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி தலையிலும் உடலிலும் நீராடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீராகும். மருத்துநீரில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஸ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம். அறுகு, பீர்க்கு, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பலி முதலிய 13 மூலிகைகளும், பால், கோமயம், கோசலம், கோரோசணை ஆகிய 4 உபரசங்களுமாக 17 மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதில் 3 வகையான பூக்கள், 3 வகையான இலைகள், 3 வகையான முழுத்தாவரங்கள், 2 வகையான மட்டநிலத்தண்டுகள், 2 வகையான உலர் பழங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதில் 50மூ ஆனவை சீத வீரியத்தையும், 50மூ ஆனவை வெப்ப வீரியத்தையும் கொண்டுடிருப்பதால் உடலில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றத்தை சமநிலைப்படுத்துகின்றன. இம்மூலப்பொருட்களின் மருத்துவச் செய்கைகளில் கோழையகற்றி (7), வியர்வைபெருக்கி (5), குளிர்ச்சியுண்டாக்கி (4), துவர்ப்பி (4), அகட்டுவாய்வகற்றி (4), வெப்பகற்றி (4) என்பன காணப்படுகின்றன. வெப்ப மிகுதியினால் அம்மை நோய்கள் உருவாவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனால் தொற்று நோய்களும் இக்காலத்தில் ஏற்படும். உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு வியர்வைபெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கி, வெப்பகற்றி, வரட்சியகற்றி போன்ற செய்கைகளும், உடல் உரமாக்கி, உடற்றேற்றி, துவர்ப்பி போன்ற செய்கைகள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதற்கும் பயன்படுகின்றன. இளவேனில் காலத்தில் சூரியன் பூமிக்கு அண்மையில் வருவதால் சூழலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பின்பனி காலத்தில் மக்களில் தன்னிலை விருத்தியடைந்திருந்த கபம் வேற்றுநிலை விருத்தியடையும். இக்கப மிகுதியினால் பசித்தீ கெட்டு கபப் பிணிகள் உருவாகும். பிளேவினொய்ட், பீனோலிக், ரனின், அல்கலொய்ட், சப்போனின், குக்குமின், ஜின்ஜரோல், பிப்பெரின், அந்தோசயனின், அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகியன மருத்துநீரில் உள்ள முக்கிய வேதியல் சத்துக்களாகும். இம்மூலப்பொருட்களின் வேதியல் சத்துக்கள் கபப்பிணிகள், பித்த நோய்கள் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துவதுடன் உடலை வலுப்படுத்தவும், மனதைப் புத்துயிர்ப்படையவும் செய்கின்றன. இந்து சமயம் வெறுமனே நம்பிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறை அல்ல. அது அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறையைக் கொண்டமைந்தது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மருத்துநீர் விளங்குகிறது.