Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13223| Title: | யாழ்ப்பாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களின் தலவிருட்சங்களும் அவற்றின் சித்தமருத்துவ முக்கியத்துவமும் |
| Authors: | Rishikanthi, P. Subaskar, M. Arivazhagan, N. Viviyan, S. |
| Keywords: | யாழ்ப்பாணம்;இந்து ஆலயங்கள்;தலவிருட்சம்;சித்த மருத்துவம்;சமூக ஆரோக்கியம்;வாழ்வியல் |
| Issue Date: | 2026 |
| Publisher: | Faculty of Hindu Studies University of Jaffna, Sri Lanka |
| Abstract: | ஈழத்துத் தமிழ் பண்பாட்டுப் பின்புலத்தில், குறிப்பாக சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாண மண்ணில், சமயம் என்பது வெறும் வழிபாட்டு முறையாக மட்டுமன்றி, ஒரு முழுமையான வாழ்வியல் அறமாகவே போற்றப்படுகிறது. இந்த வாழ்வியலில் சித்த மருத்துவம் என்பது பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பதற்கமைய ஆன்மிக மேன்மைக்கு உடல் ஆரோக்கியம் அவசியம் என்பதை உணர்ந்த எம் முன்னோர்கள், ஆலய வழிபாட்டு முறைகளினூடாகச் சித்த மருத்துவக் கோட்பாடுகளைப் பொதிந்து வைத்துள்ளனர். இந்து ஆலயக் கட்டடக்கலை மற்றும் வழிபாட்டு மரபுகளில் 'தலவிருட்சம்' என்பது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித அங்கமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு தனித்துவமான மரத்தை வழிபாட்டிற்குரியதாகக் கொண்டுள்ளன. 'இயற்கையே இறைவன்' எனும் உயரிய தத்துவத்தைப் பறைசாற்றும் இத்தலவிருட்சங்கள், சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தேவையான மூலிகைப் பாதுகாப்பிலும் மனித ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் எத்தகைய அறிவியல் ரீதியான தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை இவ்வாய்வு விளக்குகின்றது. யாழ்ப்பாணத்தின் முக்கிய இந்து ஆலயங்களில் உள்ள தலவிருட்சங்களை இனங்காண்பதும், அவற்றின் தாவரவியற் பண்புகள் மற்றும் சித்த மருத்துவக் குணங்களை ஆய்வு செய்வதும் இதன் முதன்மை நோக்கமாகும். மேலும், ஆலயச் சூழலில் இத்தாவரங்கள் எவ்வாறு ஒரு நுண்-மருத்துவக் காப்பகமாகத் தொழிற்படுகின்றன என்பதை மருத்துவ ரீதியாக நிறுவுவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது விளக்கமுறை ஆய்வு முறையியல் மற்றும் கள ஆய்வு ஆகியவற்றைப் பின்பற்றுகின்றது. யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய இந்து ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், செல்வச்சந்நிதி முருகன் கோவில், வல்லிபுரம் ஆழ்வார் கோவில், கீரிமலை நகுலேஸ்வரர் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில், மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயில் தலவிருட்சங்களாக முறையே வன்னிமரம், வேம்பு, அரசமரம், இலுப்பை, மாமரம், அரசமரம், மருதமரம், வில்வம், வேம்பு போன்றன காணப்படுகின்றன. தரவுகள் ஆலய வரலாற்றுச் சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும் 'பதார்த்தகுண சிந்தாமணி' மற்றும் 'குணவாகடம்' போன்ற சித்த மருத்துவ மூல நூல்களுடன் ஒப்பிடப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்து ஆலயங்களில் காணப்படும் வில்வம்,வேம்பு, வன்னி, நெல்லி, ஆலமரம், மருதமரம், அரசமரம், வன்னி, இலுப்பை போன்ற தலவிருட்சங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ முக்கியத்துவமுடைய பண்புகளைக் கொண்ட மூலிகைகளாக காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது. உதாரணமாக வேம்பு கிருமிநாசினியாகவும் தோல் நோய்களுக்கும் பல் நோய்க்கும் பயன்படுத்துவதுடன், நெல்லி உடல்தேற்றியாகவும் காயகற்ப மூலிகையாகவும் வில்வம் நீரிழிவு மற்றும் வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகளுக்கும் மாமரம், அரசமரம் போன்றன வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.மருத மரத்தின் வேர்கள் மண்ணின் நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்தி நிலத்தடி நீரின் மலினங்களை அகற்றி தூய்மைப்படுத்துகிறது. ஆலயங்களைச் சூழவுள்ள இத்தாவரங்கள் சூழலில் காணப்படும் அசுத்த மாசுக்களையும் வளியில் காணப்படும் நச்சு இரசாயனப்பதார்த்தங்களை அகற்றி வளியைச் சுத்தமாக்குவதுடன் ஒட்சிசன் அளவை அதிகரிகத்து வளிமண்டலத்தைச் சுத்திகரிப்பதுடன், அப்பகுதி மக்களின் உடனடி மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம், இந்து சமய வாழ்வியலில் பொதிந்துள்ள மருத்துவ அறிவியலை வெளிக்கொணர முடிவதுடன், இத்தலவிருட்சங்களைப் பாதுகாப்பதன் ஊடாக வருங்காலச் சந்ததியினருக்கு சிறந்த மூலிகைகளையும் அதன் மருத்துவ பாரம்பரியத்தையும் வழங்க முடியும் என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13223 |
| Appears in Collections: | Siddha Medicine |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| யாழ்ப்பாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களின் தலவிருட்சம்.pdf | 1.17 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.