Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12708
Title: ஈழத்து நவீன தமிழ்க் காவிய மரபில் முருகையனின் வகிபாகம்
Authors: Gnanasambanthan, V.
Visaharuban, K.
Keywords: நவீன தமிழ்க் காவியங்கள்;முருகையன்;சமூக விடுதலை
Issue Date: Jul-2024
Publisher: University of Jaffna
Abstract: இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் நன்கு அறியப்பட்டவர் முருகையன். இவர் ஈழத்துத் தமிழ்ப் புலமைசார் மரபில் நவீன தமிழ்க் காவிய மரபிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். ஈழத்து நவீன தமிழ்க் காவிய மரபில் முருகையனின் வகிபாகத்தைக் கண்டறிதலே இந்த ஆய்வின் முதன்மையான நோக்கமாகும். தமிழில் நவீன தமிழ்க் காவியங்களின் எழுச்சி, ஈழத்தில் நவீன தமிழ்க் காவியங்கள் தோற்றம் பெற்று வளர்ந்த நிலை, ஈழத்துத் தமிழ்க் காவிய மரபில் முருகையனின் முக்கியத்துவம் என்பனவற்றை இனங்காணல் துணை நோக்கங்களாகும். விவரண மற்றும் ஒப்பீட்டு ஆய்வு முறையினூடாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அச்சில் வெளிவந்த முருகையனின் ‘தகனம்’(1962) ‘நெடும்பகல்’(1967), ‘ஆதி பகவன்’ (1978), ‘அது - அவர்கள்’ (1986), ஆகிய நான்கு நவீன தமிழ்க் காவியங்களும் முதல் நிலைத் தரவுகள் ஆகும். சமகாலத்தில் வாழ்ந்த ஏனைய புலமையாளர்களது நவீன தமிழ்க் காவியங்கள், ஈழத்து நவீன தமிழ்க் காவியங்களுடன் தொடர்புடையதாக இதுவரை வெளிவந்த ஆய்வு நிலை எழுத்துகள் முதலானவை இரண்டாம் நிலைத் தரவுகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கல்வயல் எனும் கிராமத்திற் பிறந்த இவரது குடும்பச் சூழல் இவருக்கு நிறைந்த தமிழறிவினைக் கொடுத்தது. சைவத்தமிழ் மரபும் புராணபடனச் சூழலும் இவரது ஆளுமை வளர்ச்சியின் பின்புலமாக அமைந்திருந்தன. இந்துக் கல்லூரியில் கற்ற காலத்தில் கைலாசபதியுடன் இவருக்கு உண்டான தொடர்பு, ஆங்கிலப்புலமை, மேலை நாட்டு இலக்கியப் பரிச்சயம், விஞ்ஞானப்புலமை போன்றன இவரது ஆளுமையினை மேலும் செழுமைப்படுத்தின. அத்துடன் பல்வேறுபட்ட பணிநிலைகளின் ஊடாகப் பெற்ற அனுபவம் இவருக்கு மேலும் பல உந்துதல்களை அளித்தன. முற்போக்குச் சிந்தனையுடைய முருகையன் நவீன காவியங்கள் மட்டுமன்றி கவிதை, பாநாடகம், திறனாய்வு, மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார். ஈழத்து நவீன தமிழ்க் காவிய மரபில் இவரது பங்களிப்புக் கனதியானது. தனது காவியங்களினூடு உலக உயிர்களின் தோற்றம், மனிதனின் சிந்தனை வளர்ச்சி, சமூகமாற்றம், சமூக விடுதலை, பொதுவுடைமைச் சித்தாந்தம், போன்றவற்றைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த ஆய்வினூடே நவீன தமிழ்க் காவிய மரபில் புதிய உத்தி முறைகளைக் கையாண்டு புதுமைகள் நிகழ்த்தியவராகவும் ஏனைய படைப்பாளிகளிலிருந்து தனித்துத் தெரியும் ஆளுமையாகவும் முருகையனை இனங்காண முடிந்தது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12708
Appears in Collections:Cintanai 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.